அமரர் லீயின் உயில்களைக் கையாண்டதன் தொடர்பில் வழக்கறிஞர் குவா கிம் லி மீது ஒழுங்கு நடவடிக்கை

அமரர் லீயின் உயில்களைக் கையாண்டதன் தொடர்பில் வழக்கறிஞர் குவா கிம் லி மீது ஒழுங்கு நடவடிக்கை

2 mins read
3ad66baa-d741-45b5-9ea7-2060ddc925cf
-

சிங்­கப்­பூ­ரின் முதல் பிர­த­ம­ரான அம­ரர் லீ குவான் இயூ­வின் உயில்­க­ளைத் தவ­றா­கக் கையாண்­ட­தன் தொடர்­பி­லான புகார்­க­ளின்­ பே­ரில் திரு­வாட்டி குவா கிம் லி (படம்) ஒழுங்கு நட­வ­டிக்­கையை எதிர்­கொள்கிறார். திரு லீ குடும்­பத்­தா­ரி­டை­யே­யான சச்­ச­ர­வு­க­ளின் அண்­மைய நிலைப்­பாடு இது.

திரு­வாட்டி குவா­வின் நடத்தை பற்றி திரு லீ சியன் யாங், டாக்­டர் லீ வெய் லிங் ஆகிய இரு­வ­ரும் பதிவு செய்த இரண்டு கூடு­தல் புகார்­களை முறை­யாக விசா­ரிக்க ஒரு தீர்ப்­பா­யம் அமைக்­கப்­பட வேண்­டும் என உயர் நீதி­மன்­றம் நேற்று ஆணை­யிட்­டது. இவ்­வி­ரு ­வ­ரும் அந்த சொத்து தொடர்­பான விருப்ப ஆவ­ணத்தை நிறை­வேற்ற உரிமை கொண்­ட­வர்­கள்.

திரு லீ குவான் இயூ­வின் இளைய இரு பிள்­ளை­களும் தாங்­கள் திரு­வாட்டி குவா­வுக்கு எதி­ரா­கப் பதிவு செய்த நான்கு புகார்­களில் ஒன்றை மட்­டும் விசா­ரிக்க எடுத்த வழக்கறிஞர்கள் சங்­கத்­தின் முடி­வுக்கு எதி­ராக மேல்­மு­றை­யீடு செய்­த­தை­யொட்டி இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

மறைந்த திரு லீயின் முந்தைய உயில்­களை அழிப்­பது தொடர்­பி­லான ஆணை­களை திரு­வாட்டி குவா பின்­பற்­றத் தவ­றி­னாரா, மறைந்த திரு லீ குவான் இயூ­வு­ட­னான தமது உரை­யா­டல் பதி­வு­க­ளைப் பிர­த­மர் லீ சியன் லூங்­குக்கு அனுப்­பி­ய­தன் மூலம் ரக­சி­யத்­தன்­மை­யின் கட­மை­களை மீறி­னாரா, விருப்ப ஆணையை நிறை­வேற்­று­ப­வர்­க­ளுக்குத் தவ­றான தக­வல்­களை வழங்­கி­னாரா எனும் மூன்று புகார்­களை விசா­ரிக்­கு­மாறு அந்­தத் தீர்ப்­பா­யம் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

திரு லீ குவான் இயூ­வி­ட­மி­ருந்து பெற்ற ஆணை­கள் மற்­றும் அறி­வு­ரை­கள் தொடர்­பி­லான சம­கால குறிப்­பு­கள் மற்­றும் பதி­வு­களை முறை­யாக வைத்­துக்­கொள்ள திரு­வாட்டி குவா தவ­றி­விட்­டார் எனும் நான்­கா­வது புகாரை உயர் நீதி­மன்­றம் தள்­ளு­படி செய்­தது.

திரு லீ சியன் யாங்­கும் டாக்­டர் லீயும் திரு­வாட்டி குவா­வின் நடத்தை பற்றி வழக்கறிஞர்கள் சங்­கத்­தில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதம் 15ஆம் தேதி புகார் செய்­த­னர். சலுகை மற்­றும் ரகசியத்தன்மை மீற­லின் தொடர்­பி­லான புகாரை மட்­டும் விசா­ரிக்க முடிவு எடுப்­ப­தற்கு முன்­பாக அந்­தப் புகார்­களை விசா­ர­ணைக் குழு­வுக்கு வழக்கறிஞர்கள் சங்­கம் பரிந்­து­ரைத்­தது.

மற்ற இரண்டு புகார்­க­ளுக்கு எதி­ரா­க­வும் ஒழுங்கு நட­வ­டிக்­கை­யைத் தொடங்­கு­மாறு வழக்கறிஞர்கள் சங்­கத்தை நீதி­பதி வேலரி தியன் கேட்­டுக்­கொண்­டார்.

லீ சகோ­தர, சகோ­த­ரி­க­ளின் உற­வி­ன­ரும் லீ அண்ட் லீ சட்ட நிறு­வ­னத்­தின் நிர்­வா­கப் பங்­கா­ளி­யு­மான திரு­வாட்டி குவா, கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி முதல் 2012ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 2ஆம் தேதிக்கு இடைப்­பட்ட காலத்­தில் மறைந்த திரு லீ குவான் இயூ ஆறு உயில்­களை வரைய உத­வி­னார். இறுதி உயி­லைத் தயா­ரிப்­ப­தில் திரு­வாட்டி குவா ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அதில் கையொப்­பம் ­இ­டப்­பட்ட பிறகு அவ­ருக்கு அது பற்­றித் தெரி­விக்­கப்­பட்­டது.

விசா­ர­ணைக் குழு தனது இரண்டு அறிக்­கை­களில் இரு வேறு முடி­வு­க­ளை எடுத்துள்ளதால், முறை­யான விசா­ர­ணை­யைத் தீர்ப்­பா­யத்­தின் மூலம் நடத்­து­வது அவ­சி­ய­மா­கிறது என வழக்கறிஞர்கள் சங்­கம் முடிவு செய்­த­தா­க­வும் நீதி­பதி தியன் குறிப்­பிட்­டார்.