செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
899c82cd-6344-4da5-95a2-e6b0a2da3468
-

ஹோட்டலில் துண்டுகளுக்குத் தீவைத்தவருக்கு 3 மாதச் சிறை

நண்பருடனும் ஒரு பெண்ணுடனும் சேர்ந்து ஹோட்டல் அறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் எரிச்சலடைந்த லாவ் ஷெங் ஷியுன் எனும் ஆடவர்

அந்த ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த துண்டுகளின் மீது தீ வைத்ததற்காக அவருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூர் கடற்படையில் பணி புரிந்த 34 வயது லாவ், அபாயத்தை ஏற்படுத்தும் நோக்கில் தீ வைத்ததாக அவர் மீதான குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நண்பரும் உடன் பணிபுரிபவருமான 29 வயது சுவா வென் ஹாவ், லாவ் ஆகிய இருவரும் ஜாலான் புசாரில் உள்ள ஃபோச் ரோட்டின் 'டபள்யூ கேடிவி' எனும் கேளிக்கைக்கூடத்துக்குச் சென்றனர். அங்கு மது அருந்திய அவர்கள் அங்கு சந்தித்த வியட்னாமிய பெண்ணுடன் ஹோட்டல் 81 வயலெட் எனும் விடுதிக்குச் செல்ல தீர்மானித்தனர். அந்த ஹோட்டலில் இரவு 9.20 மணி வாக்கில் அறையை வாடகைக்கு எடுத்தனர். அந்த அறைக்குள் மூவரும் நுழைவதைக் கண்ட அந்த ஹோட்டல் ஊழியர், இருவருக்கு மேல் அந்த அறைக்குள் செல்ல அனுமதி இல்லை என்று குறிப்பிட்டார். ஹோட்டலின் பின்வாசல் வழியாக வெளியே சென்ற லாவ், சிகரெட் புகைத்தார். அங்கிருந்து இரவு 9.50 மணியளவில் அகலும் முன்பாக அங்கு வைக்கப்பட்டிருந்த துண்டுகளின்மீது தீ வைத்தார் லாவ். தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யவிருப்பதாக லாவ்வின் வழக்கறிஞர் குறிப்பிட்டார். அபாயம் விளைவிக்கும் நோக்குடன் தீ வைக்கப்பட்டால் ஏழாண்டுகள் வரை சிறை, அபராதம் விதிக்கப்படலாம்.

$1 பில்லியனுக்கு மேல் மோசடி;

சந்தேக நபர்மீது அதிக குற்றச்சாட்டுகள்

சிங்கப்பூரின் வரலாற்றிலேயே ஆகப் பெரியதென கருதப்படும் $1 பில்லியனுக்கும் அதிகமான தொகை தொடர்பிலான மோசடியில் சம்பந்தப்பட்ட வர்த்தகர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இங் யு ஸி, 33, எனும் ஆடவர் மீது முன்பு இரண்டு ஏமாற்று குற்றச்சாட்டுகளும் $48 மில்லியன் தொடர்பான வர்த்தக மோசடியில் பங்கேற்றதாக இரண்டு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டிருந்தன. $8 மில்லியனுக்கும் அதிகமான தொகை தொடர்பிலான மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது மேலும் 5 குற்றச்சாட்டுகள் நேற்று முன்தினம் சுமத்தப்பட்டன.

இன்வி அசெட் மேனேஜ்மண்ட், என்வி குளோபல் டிரேடிங் ஆகிய நிறுவனங்களின் இயக்குநரான இங் நிக்கல் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான நிதியாக முதலீட்டாளர்களிடம் பணம் பெற்றார். மூன்று மாதங்களில் சராசரியாக 15% வரை லாபம் கிடைக்கும் என முதலீட்டாளர்களிடம் உறுதி அளித்திருந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கும் இவ்வாண்டு பிப்ரவரி மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட $1 பில்லியன் தொகையில், கிட்டத்தட்ட $300 மில்லியன் இங்கின் தனிப்பட்ட கணக்குக்கு மாற்றப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வர்த்தக விவகாரப் பிரிவு அவரிடமிருந்து $100 மில்லியன் மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்தது. இங்கின் இரு நிறுவனங்களுக்கும் சிங்கப்பூர் நாணய ஆணையம் உரிமம் வழங்கவில்லை. தற்போது $1.5 மில்லியன் பிணையில் வெளியில் இருக்கிறார் அவர். மின்னணுவியல் முறையில் கண்காணிக்கப்படும் அவர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு ஏமாற்று குற்றத்துக்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம். மோசடி வர்த்தகக் குற்றம் ஒவ்வொன்றுக்கும் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $15,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.