வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் தங்கு விடுதியில் இவ்வாரம் கண்டறியப்பட்ட புதிய கொவிட்-19 சம்பவ குழுமத்தால் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கொவிட்-19 கட்டுப்பாடுகள் உடனடியாக மேலும் கடுமையாக்கப்பட உள்ளன.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியிலிருந்து சமூகத்திற்கு உருமாறிய கிருமியின் தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கையை எடுப்பதாக
அமைச்சுகள் நிலை பணிக்குழு நேற்று தெரிவித்தது. இருப்பினும் இந்தியாவிலிருந்து அந்தப் புதிய கொவிட்-19 கிருமிதான் வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸில் ஏற்பட்ட புதிய சம்பவங்களுக்குக் காரணம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதை பணிக்குழு வலியுறுத்தியது.
கூடுதல் அபாயமுள்ள நாடுகள், பகுதிகளிலிருந்து வரும் அனைத்துப் புதிய வெளிநாட்டு ஊழியர்களும் 14 நாள் இல்லத் தனிமை உத்தரவை பிரத்யேக வசதிகளில் பின்பற்றவேண்டும். 'சிராலஜி' பரிசோதனையில் முன்பு கிருமித் தொற்று ஏற்பட்டது தெரியவந்தவர்களும் இல்லத் தனிமை உத்தரவை மேற்கொள்ள வேண்டும் என்று மனிதவள இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்தார்.
கொவிட்-19 பரிசோதனை முடித்தவுடன் வெளிநாட்டிலிருந்து வரும் ஊழியர்களின் தற்காலிகத் தங்குமிடத்தில் கூடுதல் ஏழு நாள் சோதனை முறையை மேற்கொள்ளவேண்டும். அங்கிருந்து வெளியேறும் முன்னர் மேலும் ஒரு கொவிட்-19 'பிசிஆர்' சோதனையை மேற்கொள்ளவேண்டும்.
இதற்கு முன்பு பிரத்யேக தங்கும் வசதிகளில் நான்கு நாட்கள் மட்டுமே ஊழியர்களில் சிலர் தங்க வேண்டியிருந்தது. அதற்கு பின்னர் விரைவு கட்டுமான விடுதிகளில் மீதமுள்ள இல்லத் தனிமை உத்தரவை மேற்கொள்வர். ஏழு நாள் பரிசோதனை முறையையும் பின்பற்றுவார்கள்.
'சிரோலஜி' பரிசோதனையில் முன்பு தொற்று இருந்தது கண்டு அறியப்பட்டால் 14 நாள் இல்லத் தனிமை உத்தரவை அவர்கள் பின்பற்ற தேவையில்லை.
ஆனால் புதிதாக வரும் வெளிநாட்டு ஊழியர்கள் இனி அட்டவணைப்படி வழக்கமான பரிசோதனை முறையைப் பின்பற்றவேண்டும். அதன்படி இருவாரங்களுக்கு ஒருமுறை அவர்கள் கொவிட்-19 கிருமித் தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும்.
வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் தங்குவிடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களில் 11 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக நேற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கு வசிக்கும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் அங்கிருந்து நேற்று வெளியேற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இதற்கிடையே, அதே தங்குவிடுதியில் மேலும் 17 வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
கடந்த திங்கட்கிழமையன்று அங்கு வசிக்கும் 35 வயது பங்ளாதேஷ் ஊழியருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டது உறுதியானதும் அந்தத் தங்குவிடுதியில் சிறப்பு கொவிட்-19 மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இந்தச் சிறப்பு மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் 17 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 17 பேரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு தேசிய தொற்றுநோய் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்களுக்கு ஏற்கெனவே கிருமித்தொற்று ஏற்பட்டு தற்போது மீண்டும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிய அமைச்சும் நிபுணர்கள் குழுவும் விசாரணை நடத்துகின்றன.
இந்நிலையில், தங்குவிடுதி
யிலிருந்து வெளியேற்றப்பட்ட ஊழியர்கள் மற்ற இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பேலஸ்டியர் சாலையில் உள்ள குவாலிட்டி ஹோட்டல் மார்லோவில் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
240 அறைகளைக் கொண்ட அந்த ஹோட்டல் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.
வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் தங்குவிடுதியில் வசிக்கும் ஊழியர்கள் சிலரை ஏறத்தாழ 15 பேருந்துகள் குவாலிட்டி ஹோட்டல் மார்லோவில் நேற்று காலை இறக்கிவிட்டன. வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் தங்குவிடுதியில் வசிக்கும் 17 பேரைத் தவிர்த்து, நேற்று நண்பகல் நிலவரப்படி மேலும் 24 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 60,904ஆக அதிகரித்துள்ளது.
சமூக அளவில் ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குவிடுதியில் புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மற்றவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்.
சிங்கப்பூர் வந்ததும் அவர்களுக்கு இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

