இம்மாதம் 20ஆம் தேதி நிலவரப்படி உருமாறிய கொவிட்-19 கிருமித்தொற்றால் சிங்கப்பூரில் எட்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது. தேவையான பொது சுகாதாரப் பராமரிப்பு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படுவதாக அது கூறியது.
பாதிக்கப்பட்ட எட்டு பேரில் ஏழு பேர் பி117 வகை உருமாறிய கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உருமாறிய
பிரிட்டிஷ் கிருமித்தொற்று என்றும் அழைக்கப்படுகிறது.
ஒருவர் பி1351 வகை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது உருமாறிய தென்னாப்பிரிக்க கிருமித்தொற்று என்று அழைக்கப்படுகிறது.
உருமாறிய தென்னாப்பிரிக்க கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர் கடற்துறையில் பணிபுரிபவர். வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் கப்பல்களில் பணிபுரிபவர்களிடமிருந்து அவருக்கு நோய் பரவியிருக்கலாம் என்று சுகாதார அமைச்சு கூறியது.
தங்குவிடுதியில், வேலையிடத்தில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் உருமாறிய கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழு பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட எட்டு பேரில் மூவரின் குடும்பத்தினருக்குக் கிருமி பரவியுள்ளது.
ஆனால் அவர்களிடமிருந்து மற்றவர்களுக்குக் கிருமி பரவியதாக தெரியவில்லை என்று அமைச்சுகள் நிலைப் பணிக் குழு நேற்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைப் பிரிவு இயக்குநரான இணைப் பேராசிரியர் கென்னத் மாக் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த 342 பயணிகள் மற்ற வகை உருமாறிய கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் 155 பேர் உருமாறிய பிரிட்டிஷ் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
130 பேர் உருமாறிய தென்னாப்பிரிக்க கிருமித்தொற்றால் நோய்வாய்ப்பட்டனர். 46 பேர் உருமாறிய இந்திய கிருமித்தொற்று என்று அழைக்கப்படும் பி1617 வகை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
ஐவருக்கு பி1525 வகை கிருமித்தொற்று ஏற்பட்டது. நான்கு பேருக்கு பி1 என்று அழைக்கப்படும் பிரேசிலிய பி11281 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு வகை பிரேசிலிய கிருமித்தொற்றால் வெளிநாடுகளிலிருந்து வந்த இருவர் பாதிக்கப்பட்டனர்.
"உருமாறிய கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிங்கப்பூர் வந்ததும் அவர்களுக்கு இல்லத்
தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்டனர்.
"உருமாறிய கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரிடமிருந்து சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரியவில்லை.
"கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தொடர்ந்து மருத்துவச் சோதனை நடத்தப்படும்.
"ஆனால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
"கூடுதல் மருத்துவப் பரிசோதனைகளும் நடத்தப்படுகின்றன. நாட்கள் செல்லச் செல்ல பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மாறும். அதுகுறித்து கூடுதல் தகவல்களை நாங்கள் வெளியிடுவோம்," என்றார் இணைப் பேராசிரியர் மாக்.

