சிங்கப்பூரில் எதிர்வரும் ஜூன் 1ஆம் தேதி முதல், அதிக
மானோர் வந்துசெல்லும் இடங்
களுக்குள் நுழைய 'டிரேஸ்டுகெதர்' செயலி அல்லது கருவியை மட்டுமே பயன்படுத்த முடியும்.
கடைத்தொகுதிகள், வேலையிடங்கள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், கல்வி நிலையங்கள், உணவு, பானக் கடைகள், உடற்பயிற்சிக்கூடங்கள் உள்ளிட்டவை அந்த இடங்களில் அடங்கும். அந்த இடங்களில் ஏற்கெனவே 'சேஃப்என்ட்ரி' மின்னிலக்க பதிவுமுறை நடப்பில் இருந்து வருகிறது.
சிங்கப்பூர்வாசிகளில் 90 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் 'டிரேஸ்டுகெதர்' செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர் அல்லது கருவியைப் பெற்றுக்கொண்டுள்ளதை அடுத்து, 'டிரேஸ்டுகெதர்' செயலி அல்லது சாதன கட்டாயப் பயன்பாடு நடப்புக்குக் வருகிறது என்று அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்க அலுவலகமும் சுகாதார அமைச்சும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
கைபேசி கேமராவைக் கொண்டு 'சேஃப்என்ட்ரி கியூஆர்' குறியீட்டை வருடுவது அல்லது 'சிங்பாஸ்' செயலியைக் கொண்டு நுழைவைப் பதிவு செய்வது போன்ற 'சேஃப்என்ட்ரி' பதிவு முறை ஜூன் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படும்.
'டிரேஸ்டுகெதர்' மூலம் வருகையைப் பதிவுசெய்யும்போது பெரிய கடைத்தொகுதிகளில் உள்ள பேரங்காடிகள், பகுதிவாரிக் கடைகள் உள்ளிட்ட தனித்தனி கடைகளுக்குள் நுழைய ஏற்கெனவே 'சேஃப்என்ட்ரி' மூலம் வருகையைப் பதிவுசெய்யும் நடைமுறையும் நீக்கப்படும்.
'டிரேஸ்டுகெதர்' மூலம் வருகையைப் பதிவுசெய்யும் முறைக்கு கட்டாயமாக்கப்படாத இடங்கள், ஏற்கெனவே 'சேஃப்என்ட்ரி' மூலம் வருகையைப் பதிவுசெய்யும் ஏற்பாட்டை நிறுத்த வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை ஏற்படுத்தித் தருவதே இதன் நோக்கம். மருந்துக்கடைகள், பல்பொருள் அங்காடிகள், வீடமைப்பு வளர்ச்சிக் கழக பேட்டைகளில் அமைந்துள்ள சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்டவை அத்தகைய இடங்களில் அடங்கும்.
அருகருகே இருக்கும் 'டிரேஸ்டுகெதர்' சாதனங்கள் அல்லது செயலியைக்கொண்ட கைபேசிகள் புளுடூத் சமிக்ஞைகளை குறுகிய தூரத்துக்குப் பரிமாறிக்கொள்வதன் மூலம் கொவிட்-19 தொற்றுக்கு ஆளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணமுடியும்.
தொடர்பு தடங்களைக் கண்ட
றியும்போது தவறவிடப்பட்ட,
தனிமைப்படுத்தப்பட வேண்டிய 75 பேரை அடையாளம் காண இந்தத் தொழில்நுட்பம் உதவியதாகக் கூறப்படுகிறது.
'டிரேஸ்டுகெதர் மட்டும் 'சேஃப் என்ட்ரி' திட்டம் நடப்புக்கு வந்தபிறகு, தங்களது 'டிரேஸ்டுகெதர்' கருவியை அல்லது அந்தச் செயலியைக்கொண்ட கைபேசியை எடுத்துவர மறந்துவிட்டால்கூட, அவர்கள் பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படாது என கல்வி அமைச்சு நேற்று தெரிவித்தது.
பள்ளிகளுக்குள் நுழைய தங்களது 'டிரேஸ்டுகெதர் சாதனத்தையோ அல்லது செயலியையோ பயன்படுத்தத் தேவையில்லை.
'டிரேஸ்டுகெதர்' கருவியை இன்னும் பெற்றுக்கொள்ளாதவர்கள் சமூக மன்றங்களில் அதைப் பெற்றுக்கொள்ளலாம். இதுகுறித்த மேல்விவரங்களுக்கு token.gowhere.gov.sg எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.

