போக்குவரத்து, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட், மனிதவள அமைச்சின் நிரந்தரச் செயலாளர் ஔபெக் காம் ஆகியோர், இவ்வாண்டின் மே தின விருகளில் உயரிய விருதான சிறப்பு சேவை விருதைப் பெறுகின்றனர்.
சுகாதாரம் மற்றும் பொதுப் போக்குவரத்து ஊழியர்களைத் தவறாக நடத்துவதிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்கு வலுவாக ஆலோசகராக திரு சீ விளங்கினார். ஊழியர்களின் ஊதியம் மற்றும் வேலை நலன்களை மேம்படுத்துவதன் தொடர்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைத் திரு காம் நல்கினார்.
பாராட்டு சேவை விருது பெற்ற பிறகும் மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு துடிப்புடனும் தொடர்ந்தும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்குவோருக்கு தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் சிறப்பு சேவை விருதை வழங்குகிறது. திரு சீ, திரு காம் ஆகியோர் உட்பட 143 தனிநபர்கள், அமைப்புகள் அடுத்த புதன் கிழமை விருது பெறுவர்.
தொழிற்சங்கத் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள், கொவிட்-19 காரணமாக நிலவும் நிச்சயமற்ற பொருளியல் சூழலில் ஊழியர்
களின் விருப்பத்தை ஊக்குவிக்கும் நிறுவனங்கள், வேலையிடங்களில் முன்மாதிரியாகத் திகழும் ஊழியர்கள் போன்றவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
மே தின விருதுகளில் ஆக உயரிய 'கௌரவ விருது' பெறுப
வரின் பெயர் அடுத்த செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும். தொழிலாளர் இயக்கத்துக்கு மிகச் சிறந்த சேவை வழங்கிய தனிநபர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.
டௌன்டவுன் ஈஸ்டில் நடைபெற இருக்கும் விருது நிகழ்ச்சி இரண்டு அமர்வுகளாக நடத்தப்படும். இணையம் வழியாகவும் பங்கேற்பாளர்கள் கலந்துகொள்வர். கடந்த ஆண்டு கொவிட்-19 சூழல் காரணமாக விருது நிகழ்ச்சி குறிப்பிட்ட இடத்தில் நடத்தப்படவில்லை என்றாலும் விருதுகளுக்குத் தகுதியானவர்கள் அவர்களது பங்களிப்புக்காக அங்கீகரிக்கப்பட்டனர்.
தொழிலாளர் இயக்கத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுடன் இணைந்து ஊழியர்களின் வாழ்க்கையை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றப்போவதாக திரு சீ குறிப்பிட்டார். 'யூபேஜ்' எனும் ஆற்றல் மற்றும் எரிவாயு தொழிலாளர்களின் சங்கம், 'எச்எஸ்இயு' எனப்படும் சுகாதாரச் சேவைகள் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றுக்கு அணுக்கமாக ஆலோசனை வழங்கி வந்தார் திரு சீ.
கொரோனா தொற்றுப் பரவல் தொடங்கியதிலிருந்து, வேலை
யிடங்களில் பாதுகாப்பு நிவாக நடவடிக்கைகள், மனிதவள நிர்வாகம் மற்றும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி தேவைகள் போன்றவற்றின் தொடர்பில் தக்க சமயத்தில் ஆலோசனைகள் வழங்கி, திட்டங்கள் செயல்படுத்தி திரு காம் முக்கிய பங்காற்றினார்.
படிப்படியாக உயரும் சம்பள மாதிரியை விரிவுபடுத்தியது, ஓய்வு மற்றும் மறு வேலைவாய்ப்பு வயதை உயர்த்துவது போன்ற முக்கிய முத்தரப்பு முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.
'யூபேஜ்' அமைப்பின் முன்னாள் கௌரவ பொதுச் செயலாளர்
அமரர் நாச்சியப்பன் ரங்கசாமி கிருஷ்ணசாமி சின்னையா, சிங்கப்பூர் விமான நிலைய முனைய சேவைகள் தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் அமரர் குணசேகரன் சிவஞானம் ஆகியோருக்கு தொழிலாளர் தோழர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

