கொவிட்-19 சூழல் சிங்கப்பூரில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளபோதிலும் சிங்கப்பூரர்கள் மெத்தனப்போக்குடன் இருந்துவிடக்கூடாது என்று அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று முன்தினம் நினைவூட்டினார்.
சிங்கப்பூரில் தடுப்பூசி போடும் பணி சுமுகமாக நடந்து வருவதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், சிங்கப்பூரர்கள் தொடர்ந்து சமூக இடைவெளி விதிமுறை உட்பட மற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றார் அவர்.
உலகில் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வரை எந்த நாடும் கொரோனாவிலிருந்து முழுமையான பாதுகாப்பைப் பெறாது என்று அதிபர் ஹலிமா கூறினார்.
சாங்கி பொது மருத்துவமனையில் 2018ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட நீரிழிவு, உடல்பருமன் சிகிச்சைப் பிரிவைப் பார்வையிட்ட அதிபர் ஹலிமா அங்குள்ள ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

