வழக்கறிஞர்களுக்கான தொழில்நுட்பத் தளம் ஒன்றை உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாக சட்ட இரண்டாம் அமைச்சர் எட்வின் டோங் நேற்று குறிப்பிட்டார். அதனைப் பயன்படுத்தி வழக்கறிஞர்கள் தங்களது கட்சிக்காரர்களுடன் 'ஸூம்' செயலி வழி உரையாடலாம், தங்களது மின்னஞ்சல்களைப் பார்க்கலாம், வழக்குகளை நிர்வகிக்கலாம்.
தற்போது சட்ட நிறுவனங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பத் தளங்களுடன் அவை இணைக்கப்படும் எனவும் சிங்கப்பூர் வழக்கறிஞர்கள் சங்கம் நடத்தும் இரு நாள்களுக்கான நீதிமன்ற வழக்காடல் பற்றிய பயிலரங்கில் உரையாடிபோது அவர் தெரிவித்தார்.
வழக்காடல் நடைமுறை மற்றும் ஆலோசனை உட்பட பல அம்சங்கள் பயிலரங்கில் விவாதிக்கப்படும். நேரடியாகவும் இணையம் வழியாகவும் 1,000க்கு மேற்பட்டவர்கள் இந்தப் பயிலரங்கில் பங்கேற்றனர்.
'எந்த நேரத்திலும், எங்கிருந்தும்' வழக்கறிஞர்கள் வேலை செய்யலாம் எனக் கூறி இந்தத் தொழில்நுட்பத் தளம் குறித்து நாடாளுமன்றத்தில் திரு டோங் கடந்த மாதம் குறிப்பிட்டிருந்தார்.
சட்டம் சம்பந்தமான நிர்வாகத்துக்கான முதல் தொழில்நுட்பத் தளம் இது என்று நேற்று திரு டோங் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு வகையான வழக்குகளுக்குமான நேரம், நடை
முறைத் தேவைகள், செய்ய வேண்டிய பணிகள் உள்ளிட்ட தகவல்
களுடன் வார்ப்புருக்களை உருவாக்கி நிறுவனங்களுக்குள் ஒவ்வொருவருக்குமான பொறுப்புகளையும், அவற்றுக்கான கால அளவையும் வரையறுத்துக் கொடுக்கலாம் என்று அமைச்சர் டோங் குறிப்பிட்டார்.
கட்சிக்காரர்களின் தனிப்பட்ட தகவல்களின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்படுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"சிங்கப்பூர் சட்ட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தளம் மேம்படுத்தப்படுவதன் தொடர்பில் இந்தத் துறையினரிடமிருந்து கருத்துகள் பெறப்படும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

