லஞ்ச ஊழல் தொடர்பான புகார்கள் கடந்த ஆண்டு ஐந்தாண்டு காணாத சரிவைக் கண்டதாக லஞ்ச ஊழல் புலன் விசாரணைப் பிரிவு (சிபிஐபி) தனது வருடாந்திர புள்ளிவிவர அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
கொள்ளைநோய் பரவலுக்கு இடையே கடந்த ஆண்டில் லஞ்ச ஊழல் தொடர்பாக 239 புகார்கள் செய்யப்பட்டதாக அந்த அறிக்கை சுட்டியது.
இந்த எண்ணிக்கை 2019ல் 350 ஆக இருந்தது. இது கிட்டத்தட்ட 31 விழுக்காடு சரிவு. 2018ஆம் ஆண்டில் செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 358.
நோய்ப் பரவல் காரணமாக தனியார் துறையில் பொருளியல் நட
வடிக்கைகள் பெரும் சரிவு ஏற்பட்டது புகார்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று அறிக்கை கூறியது.
கடந்த ஆண்டு பெறப்பட்ட 239ல் 81 புகார்கள் விசாரிக்கப்பட வேண்டிய புதிய புகார்களாக சிபிஐபி பதிவு செய்தது.
இது 2019ஆம் ஆண்டில் 119 ஆக இருந்தது.
அதேநேரம், புகார்களின் அடிப்
படையில் விசாரணைக்குப் பின் தண்டிக்கப்பட்டவர்களின் விகிதம் 97 விழுக்காடு என்று கடந்த ஆண்டும் தொடர்ந்தது. திரும்பப் பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை.
கொவிட்-19 கொள்ளைநேய் சவால்களுக்கு இடையிலும் குைறந்த அளவு லஞ்ச நிலவரத்தை சிங்கப்பூர் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக சிபிஐபி இயக்குநர் டெனில் டாங் கூறினார்.
அத்துடன், லஞ்ச ஊழல் ஆகக் குறைந்த அளவில் நிலவும் உலக நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் தொடர்ந்து இருந்து வருவதாகவும் அவர் சொன்னார்.
லஞ்ச ஊழலுக்கு இடமளிக்காத உறுதிப்பாடும் தொடர் கண்காணிப்பும் இதற்கான காரணங்கள் என்றார் திரு டெனிஸ்.
கடந்த ஆண்டில் தண்டிக்கப்பட்ட லஞ்ச ஊழல் வழக்குகளில் போலிஸ் அதிகாரி மகேந்திரன் செல்வராஜு, 32, என்பவர் தொடர்பானதும் ஒன்று.
விசாரணையில் இருந்த இரு பெண்களிடம் பாலியல் சேவையை லஞ்சமாகப் பெற்றதற்காக ஈராண்டு சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.
இவர்களில் ஒரு பெண் வழக்கிலிருந்து தப்பிக்கவும் மற்றொரு பெண்ணின் முதலாளியிடம் அந்தப் பெண்ணுக்குச் சாதகமான பதிலைத் தரவும் பாலியல் சேவையை அந்த அதிகாரி லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்பட்டது.
மேலும் அந்தப் பெண்களின் அனுமதியின்றி அவர்களின் சொந்த காணொளிப் படங்களையும் மற்ற தகவல்களையும் மகேந்திரன் தமது சொந்த தகவல் சேமிப்புச் சாதனத்தில் நகல் எடுத்திருந்தார்.
மின்னிலக்க தடயவியல் பயன்பாடு மற்றும் நம்பகத்தன்மையைக் கணிக்கும் கருவிகள் ஆகியவற்றின் உதவியோடு மகேந்திரனின் குற்றங்களும் லஞ்ச ஊழல் நோக்கமும் கண்டறியப்பட்டதாக சிபிஐபி கூறியது.
இந்த வழக்கு ஊடகங்களில் வெளியானதால் பொதுமக்களின் விழிப்புணர்வு அதிகரிக்க அது உதவியது.
மேலும் இதேபோன்ற சம்பவங்களில் மற்றவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களிடம் இருந்து தனக்கு புகார்கள் கிடைக்க அச்சம்பவம் உதவியதாகவும் சிபிஐபி தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டு 31 விழுக்காடு குறைவான புகார்கள்