சிங்கப்பூர் ஆடவர்களை மணம் புரியும் வெளிநாட்டுப் பெண்
களின் வயதும் படிப்பும் இதற்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் அதிகரித்து வந்துள்ளதாக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த வட்டாரத்தில் ஏற்பட்ட பொருளியல் வளர்ச்சியை இந்த மாற்றம் பிரதிபலிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
90 விழுக்காட்டுக்கும் அதிகமான மணப்பெண்கள் ஆசிய நாடுகளில் இருந்து வந்தவர்கள். 2019ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஆடவர்களை மணந்த வெளிநாட்டுப் பெண்களின் இடைநிலை வயது 29. பத்தாண்டுகளுக்கு முன்னர் இது 27 ஆகவும் 2000ஆம் ஆண்டில் 26.1 ஆகவும் இருந்தது. மேலும் 25 வயதுக்குக் குறைந்த வெளிநாட்டு மணப்பெண்களின் விகிதம் குறைவாக இருந்ததாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் தரவு தெரிவித்தது.
25 வயதுக்குக் குறைந்த வெளி நாட்டு மணமகள்களின் விகிதம் 2019ஆம் ஆண்டில் 12% ஆக இருந்தது. 2000ஆம் ஆண்டு இதன் விகிதம் 36%.
படிப்பைப் பொறுத்த வரை 2019ஆம் ஆண்டு இங்கு வந்த மணப்பெண்களில் பலர் உயர் கல்வித் தகுதிகளைப் பெற்றிருந்தனர். பல்கலைக்கழகக் கல்வி அல்லது உயர்நிலைக்குப் பிந்திய கல்வித் தகுதியை அவர்களில் 66 விழுக்காட்டினர் (மூவரில் இருவர்) பெற்றிருந்ததாக தரவு குறிப்பிட்டது. 2000ஆம் ஆண்டில் இதன் விகிதம் 36 விழுக்காடாக (மூவரில் ஒருவர்) இருந்தது.

