உயர் நீதிமன்ற நீதிபதியையும் சிங்கப்பூரின் நீதிமுறையையும் அச்சுறுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக ஆடவர் ஒருவருக்கு நேற்று ஏழு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஓரினப் புணர்ச்சி குற்றம் என்று வகைப்படுத்தும் குற்றவியல் விதித்தொகுப்பு பிரிவு 377ஏ-வை எதிர்த்து முகம்மது ஹனிஃப் முகம்மது ஹுஸைரி, 31, எனப்படும் அவர் வழக்குத் தொடுத்து இருந்தார். அந்த வழக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சமூக ஊடகத் தளமான இன்ஸ்டகிராமில் நீதிபதிக்கும் நீதிமுறைக்கும் எதிரான வன்முறையை அவர் தூண்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
துன்புறுத்தலில் இருந்து பாதுகாத்தல் சட்டத்தின்கீழ் அரசாங்க ஊழியரை நோக்கி அச்சுறுத்தல் வார்த்தைகளைப் பயன்படுத்திய ஒரு குற்றச்சாட்டை கடந்த மாதம் அந்த சிங்கப்பூரர் ஒப்புக்கொண்டார்.
மேலும் வன்செயலைத் தூண்டும் மின்னணுப் பதிவு ஒன்றைப் பரப்பிவிட்ட இரு குற்றச்சாட்டு
களையும் அவர் ஒப்புக்கொண்டார். தமது மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிக்கு தமது சமூக ஊடகப் பதிவுகளை அனுப்பி வைத்தார். மனு தள்ளுபடி செய்யப்பட்டபோது ஹனிஃப் வருத்தமடைந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி 4 மணியளவில் இன்ஸ்டகிராமில் ஒரு தகவலை பதிவேற்றினார். மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதியை வசைபாடியதோடு அச்சுறுத்தும் வகையிலான தகவலையும் அவர் இணைத்திருந்தார். அந்தப் பதிவு இன்ஸ்டகிராமில் 24 மணி நேரம் இருந்தது. அப்போது அந்தக் கணக்கை 267 பேர் பின்தொடர்ந்திருந்தனர்.
வன்முறைக்கு வித்திடும் வகை யிலான அச்சுறுத்தல் அத்தகவலில் காணப்பட்டதைத் தொடர்ந்து ஹனிஃபுக்கு எதிராக போலிசில் புகார் செய்யப்பட்டது.

