சிங்கப்பூர் அமைச்சரவை மாற்றத்தை அடுத்து நாட்டின் சுகாதார அமைச்சராக ஓங் யி காங் பொறுப்பு ஏற்கிறார். அவர் அமைச்சர் லாரன்ஸ் வோங்குடன் சேர்ந்து கொவிட்-19 சிறப்புப் பணிக்குழுவுக்குத் தலைமை ஏற்கிறார்.
புதிய அமைச்சரவை மாற்றம், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்துக்குப் பிறகு மே 15 முதல் நடப்புக்கு வருகிறது. பிரதமர் லீ சியன் லூங் நேற்று அமைச்சரவை மாற்றம் பற்றி அறிவித்தார்.
இப்போது போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றும் திரு ஓங், சுகாதார அமைச்சராக திரு கான் சாதித்தவற்றை மேலும் பலப்படுத்துவார் என்று பிரதமர் தெரிவித்தார். "திரு ஓங் சென்ற ஆண்டு போக்குவரத்து அமைச்சராகப் பொறுப்பேற்றார். அது முதல் அவர் பெரும் சவால்களைத் திறம்பட சமாளித்து வருகிறார்.
"சிங்கப்பூரின் எல்லைகளை மீண்டும் திறக்கப் பாடுபடுவது, விமான, கப்பல் மையம் என்ற சிங்கப்பூரின் நிலையைக் கட்டிக்காப்பது முதலான பலவும் அந்தச் சவால்களில் உள்ளடங்கும்.
"சுகாதாரப் பராமரிப்பில் அமைச்சர் திரு கான் கிம் யோங் சாதித்து இருக்கும் வலுவான அடிப்படைகளை புதிய சுகாதார அமைச்சராகப் பொறுப்பேற்கும் திரு ஓங் மேலும் பலப்படுத்துவார்," என்று பிரதமர் தெரிவித்தார்.
கொவிட்-19 சிறப்புப் பணிக் குழுவுக்கு தலைமை ஏற்கும் இரண்டு அமைச்சர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டபோது, அனைவரும் அணுக்கமாகச் சேர்ந்து செயல்பட்டு ஒத்துழைத்து, கொள்கைகள் அனைத்தும் நன்கு ஒருங்கிணைக்கப்படுவதையும் எதுவும் கைநழுவிப் போய்விடவில்லை என்பதையும் உறுதிப்படுத்துவார்கள் என்று பிரதமர் கூறினார்.
"சுகாதார அமைச்சர் திரு கான் கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னோடியாக இருந்து வந்திருக்கிறார்.
"சுகாதார அமைச்சர் என்ற முறையில் அவர், பல முக்கிய சுகாதாரப் பராமரிப்பு சீர்திருத்தங்களை அமல்படுத்தி இருக்கிறார்," என்று திரு லீ குறிப்பிட்டார்.
"அமைச்சரவை மாற்றத்தை அடுத்து திரு கான் வர்த்தக, தொழில் அமைச்சராகப் பொறுப்பேற்கிறார். இதில் அவர் நாட்டின் பொருளியல் மீட்சியை மேற்பார்வையிடுவார், புதிய வாய்ப்புகளை தொடர்வார்," என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
இந்தப் பதவிக்குத் திரு கான் மிகவும் பொருத்தமானவர் என்ற பிரதமர், ஏற்கெனவே மனிதவள அமைச்சில் அவர் சேவையாற்றி இருக்கிறார் என்றும் வர்த்தக தொழில் அமைச்சில் வாழ்க்கைத் தொழில் அனுபவம் அவருக்கு உண்டு என்றும் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சராக ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக பணியாற்றி வரும் திரு கான் கிம் யோங், வர்த்தக, தொழில் அமைச்சராகிறார். திரு கான் கிம் யோங்கிற்குப் பதிலாக திரு ஓங் சுகாதார அமைச்சராகிறார்.
இப்போது கல்வி அமைச்சராகச் சேவையாற்றி வரும் திரு லாரன்ஸ் வோங், அடுத்த மாதம் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.

