சிங்கப்பூரின் அமைச்சரவை மாற்றத்தை அடுத்து 15 அமைச்சு களில் ஏழு அமைச்சுகளுக்குப் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்கிறார்கள்.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் உள்ளிட்ட அமைச்சரவை சகாக்களுடன் தீவிரமாக கலந்து ஆலோசித்து அதன் விளைவாக அமைச்சரவை மாற்றம் இடம்பெறுவதாக பிரதமர் லீ சியன் லூங் நேற்று விளக்கினார்.
இதன் காரணமாகவே முடிவுகளைச் செய்ய இரண்டு வார காலம் பிடித்தது என்றார் அவர்.
"பல அமைச்சர்களுடன் பேசினேன். பிறகு ஒவ்வோர் அமைச்சரோடும் பேசி அவர்கள் புதிய இலக்கைப் பற்றி புரிந்துகொண்டு இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன்," என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை மாற்றத்தில் பெரும்பாலான மூன்றாம் தலைமுறை அமைச்சர்கள் பாதிக்கப்படாதது ஏன் என்று கேட்டதற்கு, மாற்றப்பட வேண்டிய தேவை உள்ள அமைச்சர்கள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்றும் அவர்களின் எண்ணிக்கை குறைந்த ஒன்று அல்ல என்றும் திரு லீ பதிலளித்தார்.
"மூன்றாம் தலைமுறை அமைச்சர்களை அப்படியே வைத்துக்கொண்டு நான்காம் தலைமுறை அமைச்சர்களை மாற்றுவது முடிவு அல்ல. அவசர தேவை உள்ள பதவிகளில் யாரை அமர்த்த வேண்டும் என்பதே முக்கியம்," என்று திரு லீ விளக்கினார்.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான திரு ஹெங் சுவீ கியட் அடுத்த பிரதமர் பொறுப்பு ஏற்கப்போவதில்லை என்று தெரிவித்துவிட்டதை அடுத்து நான்காம் தலைமுறைத் தலைவர்களில் அடுத்த பிரதமர் பதவிக்குத் தகுதி உள்ளவர்கள் என்று நான்கு பேர் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள். அந்த நால்வரில் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ மட்டுமே இப்போதைய பதவியில் தொடர்ந்து இருந்து வருவார்.
இது ஏன் என்று கேட்டபோது, "அதிக பொறுப்புகளை திரு டெஸ்மண்ட் லீ எற்கெனவே மேற்கொண்டு உள்ளார் என்பதை அவரிடம் பேசினால் தெரிந்துகொள்ளலாம். டெஸ்மண்ட் லீயிடம் ஒப்படைக்க பல யோசனைகள் என்னிடம் இருக்கின்றன. ஆனால் இப்போதைக்கு அவற்றை நிறுத்திவைக்க முடிவு செய்து இருக்கிறேன்," என்றார் பிரதமர்.

