சிங்கப்பூர் அமைச்சரவை மே 15 முதல் மாற்றம் காண்கிறது. சில அமைச்சர்கள் புதிய பொறுப்புகளை ஏற்க இருக்கிறார்கள். அமைச்சர்கள் வெவ்வேறான ஈடுபாடுகளையும் அனுபவங்களையும் பெறுவதற்கு உதவும் வகையில் பெரிய மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று அறிவித்தார்.
"புதிய பதவிகளில் அமைச்சர்கள் ஒன்றாகச் சேர்ந்து பாடுபடுவதற்கான வாய்ப்புகளை அமைச்சரவை மாற்றம் வழங்குகிறது. இதன்மூலம் அவர்கள் ஒருவரை ஒருவர் சிறந்த முறையில் புரிந்துகொண்டு ஒரே குழுவாகப் பிணைப்பை பலப்படுத்த முடியும்," என்று திரு லீ தெரிவித்தார்.
இதன்மூலம் தன்னிடம் இருந்தும் தனது பழைய சகாக்களிடம் இருந்தும் பொறுப்புகளை எடுத்துக்கொள்ள புதிய குழு தயாராக முடியும் என்றும் பிரதமர் கூறினார்.
அமைச்சர்களுக்கான புதிய பொறுப்புகள் பற்றியும் அவை தொடர்பான பல விளக்கங்களையும் விவரங்களையும் திரு லீ செய்தியாளர்களிடம் விவரித்தார்.
"நிதி அமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கும் திரு லாரன்ஸ் வோங் 2016ஆம் ஆண்டு முதல் இரண்டாவது நிதி அமைச்சராக செயலாற்றி அதன் மூலம் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட்டுக்கு உதவி வந்திருக்கிறார். ஆகையால் திரு வோங் போதிய அனுபவம் பெற்றவர். நிதி அமைச்சர் பதவிக்கு இயற்கையிலேயே பொருத்தமானவர்," என்று பிரதமர் கூறினார்.
இரண்டாவது நிதி அமைச்சரான இந்திராணி ராஜா அவருக்கு உதவுவார்.
திரு சான் சுன் சிங், கல்வி அமைச்சராகப் பொறுப்பு ஏற்பது பற்றி தெரிவித்த பிரதமர், "முந்தைய கல்வி அமைச்சர்கள் சாதித்தவற்றைப் பலப்படுத்தி கல்வி முறையை திரு சான் மேம்படுத்துவார்.
"அதன்மூலம் ஒவ்வொரு பிள்ளை மற்றும் மாணவரின் முழு ஆற்றலும் வெளிப்படும். எதிர்காலத்திற்குரிய இளம் சிங்கப்பூரர்களையும் உருவாக்குவார்," என்றார்.
"சுகாதார அமைச்சராகப் பொறுப்பேற்கும் திரு ஓங் யி காங், இப்போதைய அமைச்சர் ஏற்படுத்தி இருக்கும் வலுவான அடிப்படைகளை மேலும் பலப்படுத்துவார்.
"மக்கள்தொகை மூப்படைதல், சுகாதாரப் பராமரிப்பு உள்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரப் பராமரிப்பு நிதி வளம் போன்ற பிரச்சினைகளை திரு ஓங் திறம்படக் கையாள்வார்," என்றார் பிரதமர்.
"ஏறத்தாழ 10 ஆண்டுகளாக சுகாதார அமைச்சராகப் பதவி வகித்து வரும் திரு கான் கிம் யோங், வர்த்தக, தொழில் அமைச்சராகப் பதவி ஏற்கிறார். இந்தப் புதிய பொறுப்பு மிக முக்கியமானது.
"திரு கான், பொருளியல் மீட்சியை மேற்பார்வையிடுவார். பொருளியல் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை அவர் தேடுவார்," என்று திரு லீ தெரிவித்தார்.
"போக்குவரத்து அமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கும் திரு எஸ். ஈஸ்வரன், நமது போக்குவரத்து முறையின் தரம், சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலை, கட்டுப்படியாகக்கூடிய நிலை ஆகியவற்றைத் தொடர்ந்து மேம்படுத்துவார்.
"கொவிட்-19க்கு பிந்தைய உலகில் உலக விமான, கடல் மையமாக சிங்கப்பூர் தொடர்ந்து திகழ வேண்டும். இது மிக முக்கியமானது," என்றார் திரு லீ.
தொடர்பு, தகவல் அமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கும் திருவாட்டி ஜோசஃபின் டியோ, அறிவார்ந்த நாடு செயல்திட்டத்துக்கும் இணையப் பாதுகாப்பிற்கும் பொறுப்பேற்பார். இவர் பலதரப்பட்ட கொள்கைகளுக்குப் பொறுப்பு வகித்து வந்து உள்ளதைப் பிரதமர் சுட்டினார்.
நிதி அமைச்சர் பதவியை ஹெங் சுவீ கியட் கைவிடுகிறார். இது பற்றி கருத்து தெரிவித்த பிரதமர், இதன் மூலம் திரு ஹெங், அரசாங்கத்தின் முழு பொருளியல் நிகழ்ச்சி நிரலிலும் மேலும் ஒருமித்த கவனத்தைச் செலுத்த வாய்ப்பு இருக்கும் என்று தெரிவித்தார்.

