போக்குவரத்து, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட், 47, தேசிய தொழிற்சங்க காங்கிரசின் துணைத் தலைமைச் செயலாளராகிறார்.
வெளியுறவு அமைச்சில் வகிக்கும் பதவியை அவர் கைவிடுவார். என்டியுசியில் சுகாதார மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் ஆற்றி வரும் பணியை மே 15 முதல் திரு சீ மேற்கொள்வார்.
பிரதமர் லீ சியன் லூங் இந்த மாற்றங்களை நேற்று அறிவித்தார். என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங்குடன் கலந்து ஆலோசித்த பிறகு திரு சீயை தொழிற்சங்க இயக்கத்துக்கு அனுப்பும் முடிவை தான் எடுத்ததாக பிரதமர் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் என்டியுசி தலைவர் மேரி லியூவுக்கு பிரதமர் கடிதம் எழுதினார்.
அதற்குப் பதில் அளித்த திருவாட்டி லியூ, தொழிற்சங்க இயக்கத்துக்குத் திரு சீ வருவதை என்டியுசி மத்திய குழு வரவேற்பதாகத் தெரிவித்தார்.
என்டியுசி தலைமைச் செயலாளர் திரு இங், துணை தலைமைச் செயலாளர்களான ஹெங் சீ ஹாவ், சாம் ஹுவி ஃபோங் ஆகியோருடன் தொழிற்சங்க இயக்கத்தில் திரு சீ சேவையாற்றுவார். திரு சீ, போக்குவரத்து அமைச்சில் மூத்த துணை அமைச்சராகவும் தொடர்ந்து பணியாற்றுவார். திரு சீ, 2015ல் நடந்த பொதுத் தேர்தலில் பீஷான்- தோ பாயோ குழுத் தொகுதியில் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
தொடர்ந்து அவர் சுகாதார மற்றும் தொடர்பு, தகவல் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2017ல் மூத்த துணை அமைச்சராக பொறுப்பு ஏற்றார்.
சுகாதாரப் பராமரிப்பு, பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் தவறாக நடத்தப்படுவதற்கு எதிராக குரல் கொடுத்து தொண்டாற்றியதற்காக இந்த ஆண்டு மே தின தனிச் சிறப்புமிக்க சேவை விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
என்டியுசியில் வகித்து வரும் பதவியைக் கைவிட்டுவிட்டு அரசாங்கச் சேவைக்கு முழு நேரமாகத் திரும்பும்படி இப்போது மூத்த சுகாதார துணை அமைச்சராக இருக்கும் டாக்டர் கோ போ கூனை தான் கேட்டுக்கொண்டு இருப்பதாக என்டியுசி தலைவர் திருவாட்டி லியூவுக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் திரு லீ குறிப்பிட்டு உள்ளார்.
என்டியுசி மத்திய குழு இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு இருக்கிறது. டாக்டர் கோ, 49, மனிதவள அமைச்சின் மூத்த துணை அமைச்சராக பொறுப்பேற்கிறார். டாக்டர் கோ 2018ல் என்டியுசி துணை தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அவர் என்டியுசிக்கும் மசெக அரசுக்கும் இடைப்பட்ட அணுக்கமான உறவைப் பலப்படுத்தி இருப்பதாக திரு லீ தனது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
மனிதவள அமைச்சில், குறிப்பாக ஊழியர்கள் பயிற்சி தொடர்பில் அனுபவம் பெற்றிருக்கும் ஒருவர், தொழிற்சங்க இயக்கத்தில் பொறுப்பேற்பது மிகவும் நல்லது என்று திரு லீ நேற்று தெரிவித்தார்.
இதனிடையே, டாக்டர் கோ என்டியுசி தலைமைத்துவ குழுவின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார் என்பதை என்டியுசி தலைவி திருவாட்டி லியூ சுட்டினார்.

