மியன்மார் நிலவரம் குறித்து உரையாட ஜகார்த்தாவில் இன்று நடைபெறும் ஆசியான் தலைவர்
களின் கூட்டத்தில் பிரதமர் லீ பங்கேற்க இருக்கிறார்.
ஆசியான் அமைப்பிற்கு இந்த ஆண்டு தலைமை தாங்கும் புருணை ஏற்பாடு செய்துள்ள
இந்தக் கூட்டம், கொவிட்-19
கொள்ளைநோய்த் தாக்கத்துக்குப் பிறகு தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்கும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தில் ஆசியான் தலைவர்கள் எண்மர் பங்கேற்பர். பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டேக்கு பதிலாக அந்நாட்டு வெளியுறவு விவகாரச் செயலாளர் டிரோடோரோ லோசின் ஜூனியர் பங்கேற்பார். தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான்-ஓ-சாவுக்குப் பதிலாக அந்நாட்டு துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான டான் பிரமுத்வினை பங்கேற்பார்.
மியன்மார் ராணுவத் தலைவர் மின் அவுங் லைங் இந்த மாநாட்டில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதி மியன்மாரில் ராணுவம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது. மியன்மாரில் ராணுவம் பொறுப்பேற்ற பிறகு நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களில் நூற்றுக்கணக்
கானோர் உயிரிழந்ததுடன் ஆயிரக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
"ஆசியான் மற்றும் இந்த வட்டாரத்தில் அமைதி, நிலைத்தன்மை மீதான கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள மியன்மார் நிலவரம் குறித்து ஆசியான் தலைவர்கள் விவாதிப்பர்," என சிங்கப்பூரின் பிரதமர் அலுவலக அறிக்கை நேற்று தெரிவித்தது.
மியன்மார் ராணுவத் தலைவர் மின் அவுங் லைங்கை இந்தக் கூட்டத்துக்கு அழைக்கும் முடிவு மியன்மார் ராணுவத் தலைவருக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கொடுக்கும் விதத்தில் இருப்பதாக இதை மியன்மார் மக்கள் புரிந்துகொண்டதால், அழைப்புக்கு அங்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பியது.
அனைத்துலக அங்கீகாரம் அளிக்கும் விதமாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தங்களுக்கு அழைப்பு விடுக்குமாறு திருவாட்டி ஆங் சான் சூச்சியின் கட்சியைச் சேர்ந்த, தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் கோரியது.
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகள் மியன்மாரில் வன்முறையைக் கைவிடும்படி கோரியிருந்த நிலையில், பொதுமக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதை நிறுத்த வேண்டும் என ராணுவத்தை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டதுடன் திருவாட்டி ஆங் சான் சூச்சியையும் விடுவிக்க வேண்டுமெனக் கோரினார்.
ஜகார்த்தாவுக்கான இந்தப் பயணத்தில் பிரதமருடன் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், அவரது அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோரும் செல்கின்றனர். பிரதமர் இங்கு இல்லாதபோது தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் மூத்த அமைச்சருமான திரு டியோ சீ ஹியன் தற்காலிக பிரதமராகச் செயல்படுவார்.

