தெம்பனிசில் புதிதாக ஒரு தொண்டூழிய நிலையம் தொடங்கப்பட்டு இருக்கிறது.
தெம்பனிஸ் ஸ்திரீட் 43ல் உள்ள புளோக் 473ல் அமைந்துள்ள அந்த நிலையம், பல்வேறு திட்டங்களை சிறந்த முறையில் ஒருமுகப்படுத்தி சமூகத்திற்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
'எஸ்ஜி கேர்ஸ் தொண்டூழிய நிலையம்' என்று குறிப்பிடப்படும் அந்தப் புதிய நிலையம், தெம்பனிஸ் மக்கள் தொண்டூழியத்தில் ஈடுபட பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது.
'பிரஹாம் சென்டர்' என்ற ஓர் அறப்பணி அமைப்பு நிர்வகித்து நடத்தும் அந்த நிலையம், மனஉளைச்சலைக் குறைப்பதற்கான மனநல செயல்திட்டங்களில் ஒருமித்த கவனம் செலுத்துகிறது.
சென்ற ஆண்டு நவம்பர் முதல் அது செயல்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாத காலத்தில் பல்வேறு செயல்திட்டங்கள், ஓவிய உடற்பயிற்சி வகுப்புகள், சமூகப் பராமரிப்புச் சேவைகள் ஆகியவற்றின் மூலம் 1,400க்கும் மேற்பட்ட தெம்பனிஸ் மக்கள் பலன் அடைந்து இருக்கிறார்கள்.
சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் இரண்டாம் சுகாதார அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று தொடக்கவிழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சிங்கப்பூர் தொடர்ந்து வெற்றிபெற வேண்டுமானால் கருணைமிக்க சமூகத்தைப் பலப்படுத்தும் நமது முயற்சியும் தொடர வேண்டும் என்று குறிப்பிட்ட அமைச்சர், இதில் தொண்டூழியமும் பராமரிப்பு உணர்வும் உயிர்நாடியான ஒன்று என்றார்.
எஸ்ஜி கேர்ஸ் வழிகாட்டிக் குழுவின் தலைவர்களில் ஒருவரான மசகோஸ், முன்னிலையில் நேற்று இதற்கான புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்று கையெழுத்தானது.
தொண்டூழியத்தில் ஆர்வமுள்ள குடிமக்கள் பிரஹாம் சென்டரை அணுகலாம். அல்லது Volunteer.sg மூலம் தொண்டூழியத்தில் ஈடுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

