தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

7வது மாடி வீட்டில் மின்சைக்கிள் தீப்பிடித்தது; இருவர் மீட்பு

1 mins read
5809e3e5-2ae2-4c9c-98c8-c62948ce1e20
-

பிடோக் நார்த் ஸ்திரீட் 3ல் இருக்கும் 557வது புளோக்கின் 7வது மாடி வீடு ஒன்றில் நேற்றுக் காலையில் தீ மூண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.

அது பற்றி காலை சுமார் 10.25 மணிக்குத் தனக்குத் தகவல் கிடைத்ததாகவும் பாதிக்கப்பட்ட வீட்டின் சமையல் அறைக்கு வெளியே சன்னல் விளிம்பில் அடைப்பட்டு இருந்த இரண்டு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தற்காப்புப்படை குறிப்பிட்டது.

அந்த இரண்டு பேரும் சமையல் அறை சன்னல் வழியாக விரைவாக, பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் புகையை சுவாசித்து பாதிக்கப்பட்டதால் இருவரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அது மேலும் கூறியது.

பாதிக்கப்பட்ட புளோக்கில் இருந்து ஏறத்தாழ 45 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

சாங்கி தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்தவர்கள் தீயை அணைத்தனர்.

பாதிக்கப்பட்ட வீட்டில், மின்சாரத்தில் ஓடும் சைக்கிள் பேட்டரியில் மின்சாரம் ஏற்றிக்கொண்டு இருந்தபோது திடீரென்று தீ மூண்டுவிட்டது என்பது முதல் கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாகவும் தற்காப்புப் படை குறிப்பிட்டது.

அந்த வீட்டில் படுக்கை அறை மற்றும் வீட்டுக்கு வெளியே உள்ள நடைபாதையில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் தீயில் சேதமடைந்து இருப்பதாகத் தெரியவந்து உள்ளது.