நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் வளாகத்தில் தமது தாயாரைப் பராமரித்து வந்த சிங்கப்பூர் நிரந்தரவாசி, 45, சமூகத் தொற்றால் பாதிக்கப்பட்டார். சமூகத் தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து பேரில் இவரும் ஒருவர் என சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது.
பிப்ரவரி 26ஆம் தேதியன்று இவர் முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மார்ச் 19ஆம் தேதியன்று இரண்டாவது தடுப்பூசி இவருக்குப் போடப்பட்டது.
ஏப்ரல் 15ஆம் தேதியன்று இவரது பெற்றோர் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தனர். சிங்கப்பூருக்கு வந்த உடன் இவரது தந்தைக்கு கொவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த இரண்டு பேர் பயணம் செய்த அதே விமானத்தில் இருந்த அந்த ஆடவரின் தாயார், ஏப்ரல் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்டார்.
விரானா ஷிப்பிங் கார்ப்ரேஷனில் பணியாற்றும் மூத்த நிர்வாகியான தமது மகன், தனிமை வளாகத்தில் தம்மைப் பராமரிக்கக் கேட்டிருந்ததாக அந்தத் தாயார் கூறியதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. அந்த தாயாருக்கு ஏப்ரல் 15ஆம் தேதியிலும் 17ஆம் தேதியிலும் கிருமித்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.
ஏப்ரல் 16ஆம் தேதி தமது தாயார் தங்கியிருந்த அதே அறையில் தங்கியிருந்த அந்த ஆடவருக்கு வெள்ளிக்கிழமை 23ஆம் தேதியன்று சளிக்காய்ச்சல் ஏற்பட்டது. தேசிய தொற்றுநோய் நிலைத்திற்கு அவர் சனிக்கிழமையன்று அழைத்து செல்லப்பட்டார்.
பெரும்பாலானோருக்கு அறிகுறிகளுடன் கூடிய கொரோனா நோய் ஏற்படுவதைத் தடுக்க கொவிட்-19 தடுப்பூசி உதவினாலும் தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு மீண்டும் கிருமித்தொற்று ஏற்படும் சாத்தியம் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

