காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பல்; மீட்புப் பணியில் சிங்கப்பூர் கப்பல்

காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பல்; மீட்புப் பணியில் சிங்கப்பூர் கப்பல்

2 mins read
a3d2278c-39dc-4202-9829-ecb560d4bb57
-

இந்தோனீசியாவில் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடி மீட்கும் அனைத்துலக முயற்சியில் சிங்கப்பூரும் கைகொடுத்து வருகிறது. பாலித் தீவுக்கு அருகே 53 பேருடன் நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போனதாக கடந்த வாரம் இந்தோனீசிய அரசாங்கம் அறிவித்தது.

இதையடுத்து சிங்கப்பூர் உட்பட உலக நாடுகளுக்கு இந்தோனீசியா உதவி கேட்டு அழைப்பு விடுத்தது. உடனே, 'எம்வி சுவிஃப்ட் ரெஸ்கியூ' எனும் நீர்மூழ்கி மீட்புக் கப்பலை சிங்கப்பூர் அனுப்பி வைத்தது. இந்தக் கப்பல் இன்று விடியற்காலை பாலித் தீவை வந்தடைந்தது.

இதற்கிடையே தொலைக்காட்சியில் உரையாற்றிய இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, "இந்தத் துயரச் சம்பவம் எங்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது," என்றார்.

"நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். கப்பலில் இருந்த அனைவரும் இந்நாட்டின் குடிமக்கள். நாட்டின் இறையாண்மையைக் காத்த சிறந்த தேசப்பற்றாளர்கள்," என்றும் அவர் கூறினார்.

நீழ்மூழ்கிக் கப்பலைத் தேடி மீட்க ஆன அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

"நாம் அனைவரும் அவர்களுக்காகவும் அவர்களது குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்வோம். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பொறுமை, துணிச்சல் மற்றும் வலிமையை வழங்க பிரார்த்திப்போம்," என்று அதிபர் ஜோக்கோ விடோடோ சொன்னார்.

'கேஆர்ஐ நங்காலா' நீர்மூழ்கிக் கப்பலை 850 மீட்டர் ஆழத்திலிருந்து மீட்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்," என்று சனிக்கிழமை பேசிய இந்தோனீசிய கடற்படைத் தளபதி அட்மிரல் யூடோ மர்கோனோ கூறியிருந்தார்.

நீர்மூழ்கிக் கப்பல் 500 மீட்டர் ஆழத்திற்கு மேல் மூழ்கியிருப்பதால் அது நீர் அழுத்தத்தால் நசுக்கப்பட்டு விரிசல் அடைந்திருக்கலாம். இதுபோன்ற ஆழத்திலிருந்து கப்பலை மீட்பது சிரமம் என்று அவர் தெரிவித்தார்.

பாலித் தீவுக்கு அருகே நீரில் மூழ்கி, தாக்கி அழிக்கும் பயிற்சியில் ஈடுபட்டபோது நீர்மூழ்கிக் கப்பல் மாயமானது. கடைசியாக அந்தக் கப்பல் காணப்பட்ட இடத்திலிருந்து ஏவுகணை பாகங்கள், பிரார்த்தனை பாய்கள், தொலைநோக்கிக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் உள்ளிட்ட சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தப் பொருட்கள், வெளி அழுத்தத்தால் நசுங்கியிருப்பதைக் காட்டுகின்றன என்று அட்மிரல் யூடோ கூறினார்.

இதற்கு முன்பு இதே இடத்தில் எண்ணெய்க் கசிவு காணப்பட்டது. ஜெர்மனில் கட்டப்பட்ட 44 ஆண்டு பழமையான நீழ்மூழ்கிக் கப்பல் மூழ்கிய நாளிலிருந்து 72 மணி நேரத்திற்கு மட்டுமே தேவையான பிராணவாயு இருந்தது. சனிக்கிழமை காலையில் பிராணவாயு தீர்ந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.