சிங்கப்பூரில் பொது இடங்களின் தூய்மைக்கும் துப்புரவுக்கும் பொதுமக்கள் பொறுப்பு எடுத்துக் கொள்ள அதிக முயற்சிகள் இடம்பெற இருக்கின்றன.
'எஸ்ஜி துப்புரவு நாள்' இயக்கம் அடுத்த ஆண்டு முதல் மாதாமாதம் இடம்பெறும் நிகழ்ச்சியாக ஆகக்கூடும் என்று தெரிகிறது. அந்த நிகழ்ச்சியில் நகர மன்றங்கள் எல்லாம் பங்கெடுத்துக்கொள்ளும்.
எஸ்ஜி துப்புரவு நாள் செயல்திட்டம் இப்போது ஆண்டுக்கு ஒரு முறை இடம்பெறுகிறது. இதை இந்த ஆண்டில் காலாண்டு நிகழ்ச்சியாக்கி பிறகு 2022ல் மாதாமாதம் இடம்பெறும் இயக்கமாக ஆக்கும் நோக்கத்துடன் பொது துப்புரவு மன்றம் இப்போது நகர மன்றங்களுடன் பேச்சு நடத்தி வருகிறது.
இந்த மன்றம் 'சிங்கப்பூரைத் துய்மையாக வைத்திருப்போம்' என்ற ஓர் இயக்கத்தை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.
அந்த ஒரு மாதகால இயக்கம் நேற்று தொடங்கியது. அதில் கலந்துகொண்ட இந்த மன்றத்தின் தலைவர் எட்வர்ட் டி சில்வா இந்த விவரங்களை அறிவித்தார்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்றைய நிகழ்ச்சியில் பேசினார். பொது சுகாதார மிரட்டல்களுக்கு எதிரான அரண்களைப் பலப்படுத்துவதில் ஒவ்வொருவருக்கும் முக்கிய பணி இருக்கிறது என்று அமைச்சர் வலியுறுத்திக் கூறினார். கொவிட்-19 தொற்று இதை நன்கு உணர்த்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சென்ற ஆண்டு பிப்ரவரி முதல் 30,000க்கும் மேற்பட்ட இடங்கள் எஸ்ஜி தூய்மைத் தர முத்திரையைப் பெற்று இருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.
பயன்படுத்திய கை துடைப்பு தாட்கள், முகக்கவசங்கள் ஆகியவற்றை முறையாக அப்புறப்படுத்தும்படி பொதுமக்களை அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த ஆண்டின் முதலாவது எஸ்ஜி துப்புரவு நாளும் நேற்று தொடங்கியது. இதில் முதல்முறை யாக 17 நகர மன்றங்களும் ஈடுபட்டன. இதை நிரந்தரமாக்கும் திட்டங்களும் இருப்பதாக இந்த மன்றம் தெரிவித்தது.
சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருப்போம் என்ற ஒரு மாத கால இயக்கத்தின் பகுதியாக பல திட்டங்கள் இடம்பெறுகின்றன.
1,000 தொண்டூழியர்கள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படும் அக்கம்பக்க துப்புரவு நிகழ்ச்சி அவற்றில் ஒன்று. இதில் 'ஹாபிடேட் ஃபார் ஹுயுமானிட்டி' என்ற லாப நோக்கற்ற அமைப்பு ஈடுபடும்.
இதனிடையே, மக்களின் மனப்போக்கை மாற்றுவதே மிகப்பெரும் சவாலாக இருக்கிறது என்று திரு டி சில்வா கூறினார்.
பல ஆண்டுகாலம் போதித்து வந்தாலும் குப்பை போடுவது, சாப்பிட்டுவிட்டு தட்டுகளை உரிய இடங்களில் கொண்டு வைக்காமல் போவது, அசுத்தமான பொதுக் கழிவறைகள் போன்ற கெட்ட பழக்கங்கள் இன்னமும் தொடர்வதாக அவர் குறிப்பிட்டார்.

