மனிதவள அமைச்சால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் வீடுகளுக்கு நேரில் வந்து சோதனை நடத்துவர் என்பதால் முதலாளிகள் தங்களை முறையாக நடத்துகிறார்களா என்பதை உறுதிசெய்வதில் வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கு அதிக உதவி கிடைக்கும்.
இம்மாதம் 5ஆம் தேதி தொடங்கப்பட்ட புதிய திட்டத்தின்கீழ், அதிகாரிகள் வீடுகளுக்கே வந்து பணிப்பெண்களையும் அவர்களின் முதலாளிகளையும் சந்திப்பர். அப்போது, பாதுகாப்பான வேலையிடச் சூழல் குறித்தும் பணிப்பெண்களுக்கு உதவி தேவைப்பட்டால் எவ்வழிகளில் அதனைப் பெறலாம் என்பதையும் அவர்கள் எடுத்துரைப்பர்.
இல்ல வருகையின்போது பணிப்பெண்களின் வசிப்பிட, பணியிடச் சூழலையும் அதிகாரிகள் சோதனை செய்வர். மாதந்தோறும் இப்படி 200 வீடுகளுக்குச் சென்றுவர இலக்கு கொண்டுள்ளதாக மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது.
சில நேரங்களில் மரணத்திற்கு இட்டுச்செல்லும் வகையிலும் பணிப்பெண்கள் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் இடம்பெற்றதை அடுத்து, இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது.
வாய்மொழியாகச் சொல்லாவிடினும் வேறு வகை குறிப்புகள் மூலம் விதிமீறல்கள் அல்லது நியாயமற்ற வேலையிடச் சூழலைக் கண்டறியும் வகையில் அந்த அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சு தெரிவித்தது. அப்படி ஏதேனும் தெரியவந்தால் பின்னர் அமைச்சு தலையிடும். பணிப்பெண் துன்புறுத்தப்படுவது தெரியவந்தால் போலிசிடம் தகவல் தெரிவிக்கப்படும்.
இல்ல வருகைத் திட்டத்துடன், முதல்முறை வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கான தனிப்பட்ட நேர்காணல் திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக இல்லப் பணிப்பெண்களுக்கான மையத்துடன் அமைச்சு இணைந்து செயல்பட்டு வருகிறது. அப்போது தங்களது கவலைகளையும் பிரச்சினைகளையும் பணிப்பெண்கள் தெரிவிக்கலாம்.
கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து முதன்முறை பணிப்பெண்களில் அங்கொருவர் இங்கொருவராகத் தேர்வு செய்து, இல்லப் பணிப்பெண்களுக்கான மையம் அவர்களுடன் தனிப்பட்ட நேர்காணல்களை நடத்தி வருகிறது. அந்தப் பணிப்பெண்கள் வேலை செய்யத் தொடங்கி மூன்று முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு தனிப்பட்ட நேர்காணல்கள் நடத்தப்படுகின்றன.
கொவிட்-19 பரவல் காரணமாக இப்போது அத்தகைய நேர்காணல்கள் காணொளி வழியாக நடத்தப்பட்டன. இந்நிலையில், அம்மையத்தின் அலுவலகத்திற்குப் பணிப்பெண்கள் நேரில் சென்று, நேர்காணலில் பங்குபெறுவது அடுத்த மாதத்திலிருந்து மீண்டும் தொடங்கப்படவுள்ளது. இவ்வாண்டு இறுதிக்குள் முதன்முறை பணிப்பெண்கள் அனைவரிடமும் தனிப்பட்ட நேர்காணல்களை நடத்தும் வகையில் அத்திட்டம் விரிவுபடுத்தப்படும். மாதத்திற்கு 2,000 பணிப்பெண்களை நேர்காண அம்மையம் இலக்கு கொண்டிருக்கிறது.

