சமூக அளவில் ஒருவர், வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் ஒருவர் உட்பட சிங்கப்பூரில் நேற்று புதிதாக 45 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எஞ்சிய 43 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். அவர்கள் இங்கு வந்ததும் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த 43 பேரில் 13 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் என்று சுகாதார அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் சிங்கப்பூரில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள், பத்துப் பேர் நிரந்தரவாசிகள், அறுவர் இல்லப் பணிப்பெண்கள். நான்கு முதல் ஒன்பது வயதுக்குட்பட்ட சிறார் ஐவரும் அந்த 40 பேரில் அடங்குவர்.
சிங்கப்பூரில் இதுவரை 61,051 பேரை கொரோனா தொற்றிவிட்ட நிலையில், நேற்று முன்தின நிலவரப்படி அவர்களில் 60,647 பேர் குணமடைந்துவிட்டனர்.

