ப.பாலசுப்பிரமணியம்
தமிழ், சீனம், மலாய் மொழிகளின் கற்றலையும் பயன்பாட்டையும் ஊக்குவிக்கும் வகையில் அம்மூன்று மொழிகளின் கற்றல் வளர்ச்சிக் குழுக்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் $30 மில்லியன் நிதி ஆதரவை கல்வி அமைச்சு வழங்க இருக்கிறது.
ஹுவா சோங் கல்வி நிலையத்தில் கடந்த வாரம் நடந்த இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்வி துணை அமைச்சர் சுன் சூலிங் இதனை அறிவித்தார்.
கடந்த ஐந்தாண்டுகளில் தாய்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுக்களுக்கு இந்த நிதி ஆதரவு $25 மில்லியனாக இருந்தது.
வகுப்பறைக்கு அப்பால் தாய்மொழிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க உதவும் பள்ளிகளின் முயற்சி களுக்கு தமிழ், சீனம், மலாய் ஆகிய தாய்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுக்களின் ஆதரவு பக்கபலமாக விளங்கும். இந்த புதிய $30 மி. நிதி ஆதரவால் தாய்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுக்கள் இதர பங்காளிகளுடன் சேர்ந்து பலதரப்பட்ட திட்டங்களையும் நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளலாம்.
தற்போது நடந்துவரும் தமிழ் மொழி விழாவில் வளர்தமிழ் இயக்கத்துடன் இணைந்து கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, இளையர்களுக்கும் சிறார்களுக்கும் இலக்கியம், பேச்சாற்றல், கலாசாரம் சார்ந்த பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது.
தமிழ்மொழியை அரவணைத்து தங்களது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த ஊக்குவிப்பது இந்தநிகழ்ச்சிகளின் நோக்கமாகும்.
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவுடன் இணைந்து தமிழ்மொழி தொடர்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பங்காளிகளுக்கும் இந்த கூடுதல் நிதி ஆதரவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தன.
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் பங்காளித்துவ அமைப்பு களில் ஒன்றான தமிழ் முரசு நாளிதழின் இணை ஆசிரியர் வீ.பழனிச்சாமி கூறுகையில், "ஆண்டுதோறும் இடம்பெறும் நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவிற்கு தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம், தமிழ் முரசு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்து வருகின்றன.
"தகுதிபெற்ற நல்லாசிரியர்களை முறையாகத் தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி, கௌரவிக்க வேண்டும் என்ற விழா ஏற்பாட்டுக் குழுவின் நோக்கத்திற்கு தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் அதன் செயலவை உறுப்பினர்களும் பெரும் துணையாக இருந்து வருகின்றனர்.
"கல்வி அமைச்சு வழங்கும் கூடுதல் நிதி ஆதரவின் மூலம் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு அதன் பணிகளை இன்னும் செம்மையாகச் செய்ய முடியும்," என்று சொன்னார்.
"தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஏற்பாடு செய்யும் நடவடிக்கைகளில் மாணவர்கள் ஆர்வமாகப் பங்கேற்று, கற்றதை வகுப்பறையில் செயல்படுத்தும்போது மனத்தை நெகிழச் செய்கிறது," என்று கூறினார் ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியை திருமதி அ.மஹாலெஷ்மி.

