சைனாடவுன் மரபுடைமை நிலையம் கால வரையறையின்றி மூடப்படும்
எட்டு மாதப் புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு இம்மாதம் திறக்கப்படுவதாக இருந்த சைனாடவுன் மரபுடைமை நிலையம், அதன் செயல்பாட்டு மாதிரி மறுஆய்விற்காக கால வரையறையின்றி மூடப்படவுள்ளது. அந்நிலையத்தின் நிர்வாகத்தை சைனாடவுன் மரபுடைமை நிலைய நிறுவனத்திடமிருந்து சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் எடுத்துக்கொள்ள இருக்கிறது.
தள்ளுபடி விலையில் மளிகைப் பொருள்கள்
தொழிலாளர் தினத்தையும் என்டியுசியின் 60ஆம் ஆண்டு நிறைவையும் கொண்டாடும் விதமாக இவ்வாண்டு இறுதி வரை தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு என்டியுசி என்டர் பிரைஸ் நிறுவனம் $20 மில்லியன் மதிப்பிலான சலுகைகளை வழங்கவிருக்கிறது. ஜூன் 2ஆம் தேதிவரை ஃபேர்பிரைஸ் கடைகளில் குறிப்பிட்ட மளிகைப் பொருள்களுக்கு 50% தள்ளுபடியை அவர்கள் பெறலாம். அதன் நேரடி, இணையக் கடைகளில் 'சூப்பர் சேவர்' பிரிவில் அதிகபட்சம் ஆறு பொருள்களை வாங்க முடியும். இதன்மூலம் 600,000க்கு மேற்பட்ட உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பலனடைவர் என்று என்டியுசி என்டர்பிரைஸ் தெரிவித்துள்ளது.
உற்பத்தித் துறை 1.7% வீழ்ச்சி
தொடர்ந்து நான்கு மாதங்களாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், சிங்கப்பூர் உற்பத்தித் துறை கடந்த பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் மார்ச் மாதத்தில் 1.7% சரிவைச் சந்தித்தது. அதேவேளையில், 2020 மார்ச் மாதத்தை ஒப்பு நோக்க, இவ்வாண்டு மார்ச்சில் அத்துறை 7.6% வளர்ச்சி அடைந்துள்ளதைப் பொருளியல் வளர்ச்சிக் கழகம் நேற்று வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.

