பகடி வதை காரணமாக 2018ஆம் ஆண்டில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தேசிய சேவையாளர் மரணம் அடைந்தார்.
தங்களுக்குக்கீழ் செயல்படும் அதிகாரிகள் பகடி வதையில் ஈடுபடுவதைத் தடுக்கத் தவறிய இரண்டு உயர் அதிகாரிகளின் சிறைத் தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
துவாஸ் வியூ தீயணைப்பு நிலையத்தின் உயர் அதிகாரியான 40 வயது கென்னத் சோங் சீ பூனுக்கு 11 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவரது துணை அதிகாரியான 43 வயது நஸான் முகம்மது நஸிவுக்கு 10 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கவனக்குறைவு காரணமாக 22 வயது கார்ப்பரல் கொக் யுவேன் சின்னின் மரணத்தைத் தடுக்க தவறியதற்குக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருவருக்கும் 10 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
முழுநேர தேசிய சேவையாளரான கொக்கைப் பகடி வதை செய்த அதிகாரிகள் சிலர் 12 மீட்டர் ஆழமான கிணற்றில் தள்ளினர்.
நீச்சல் தெரியாத கொக் தண்ணீரில் மூழ்கி மாண்டார்.
கொக்கைக் கிணற்றில் தள்ளிவிட தங்களுக்குக்கீழ் செயல்படும் அதிகாரிகள் திட்டமிட்டிருந்தது சோங்கிற்கும் நஸானுக்கும் தெரியும் என்பதையும் ஆனால் அதைத் தடுக்க அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் உயர் நீதிமன்ற நீதிபதி சீ கீ ஊன் சுட்டினார்.
தேசிய சேவையாளர்கள் பாதுகாப்புடன் இருப்பதை உயர் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பகடி வதைக்கு இடம் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.
தேவையில்லாத நடவடிக்கையால் உயிரிழப்பு ஏற்பட்டது என்று கூறிய நீதிபதி, அதை மிக எளிதில் தவிர்த்திருக்கலாம் எனத் தெரிவித்தார்.

