தமது முன்னாள் மனைவியின் தரைவீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசியதை ஆடவர் ஒருவர் ஒப்புக்கொண்டா். அந்த 32 வயது பெண்ணின் வீட்டுச் சுவரையும் உணவக மேலாளராகப் பணிபுரியும் 36 வயது இஸ்மாயில் டிடே இப்ராஹிம் சேதப்படுத்தினார்.
தமது முன்னாள் மனைவி கடன்முதலையிடமிருந்து கடன் வாங்காதபோதிலும் அவரை அவமானப்படுத்தும் வகையில் வீட்டுச் சுவரில் 'வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கவும்' என்ற வாசகத்தை சாயத்தால் கிறுக்கினார்.
இந்த வாசகத்தைப் பார்த்து அந்தப் பெண்மணிக்கு கடன்முதலை தொல்லை கொடுப்பதாக விசாரணை நடத்திய போலிஸ் அதிகாரிகள் முதலில் நினைத்தனர்.
வீட்டிற்குள் வீசப்பட்ட பெட்ரோல் வெடிகுண்டால் யாரும் காயம் அடையவில்லை. ஆனால் அந்தச் சம்பவம் இஸ்மாயிலின் முன்னாள் மனைவியை வெகுவாகப் பாதித்தது. இதன் காரணமாக மனநல ஆலோசகரைப் பார்க்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது.
பாதுகாப்பை வலுப்படுத்த தெலுக் குராவ் வட்டாரத்தில் உள்ள தமது தரைவீட்டைச் சுற்றி அவர் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியுள்ளார். இதற்கு அவர் ஏறத்தாழ $600 செலவு செய்தார்.
அதுமட்டுமல்லாது, சுவரில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய கிட்டத்தட்ட $6,000 செலவானதாக அரசாங்க வழக்கறிஞர் கூறினார்.
இழப்பீட்டுத் தொகையாக தமது முன்னாள் மனைவிக்கு இஸ்மாயில் $5,000 தந்துள்ளார். அத்துடன் தமது முன்னாள் மனைவியின் விருப்பப்படி மூன்று அறநிறுவனங்களுக்கு $3,000 நன்கொடை அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணும் இஸ்மாயிலும் 2017ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து இருவரும் மணமுறிவு பெற்றனர். $20,000 பிணையில் இஸ்மாயில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக வரும் ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று தீர்ப்பு அளிக்கப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இஸ்மாயிலுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

