பராமரிப்பு நிலையங்களாகும் எம்ஆர்டி, பேருந்து நிலையங்கள்
எஸ்ஆம்ஆர்டி நிறுவனம் அதன் 17 எம்ஆர்டி நிலையங்களையும் ஐந்து பேருந்து நிலையங்களையும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு நிலையயங்களாக மாற்றுகிறது. இந்த நிலையங்களுக்குச் சென்று ஞாபக மறதி நோய் பற்றி தெரிந்துகொள்ளலாம். அந்நோயால் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான சேவைகளை வழங்குவோருடன் தொடர்புகொள்ளலாம். சிங்கப்பூரில் 60 வயதுக்கும் மேற்பட்டோரில் பத்தில் ஒருவர் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பொய் குறுந்தகவல் மோசடி
தங்கள் வங்கிக் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக வங்கி வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் பொய் குறுந்தகவல்கள் மீண்டும் தலைதூக்கியிருப்பதாக போலிசார் எச்சரித்துள்ளனர்.
வாடிக்கையாளர்களிடமிருந்து மோசடிப் பேர்வழிகள் அவர்களது அடையாள அட்டை, கடன் அட்டை விவரங்களைப் பெற்றுக்கொள்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவரங்களைத் தந்த பிறகு தங்களுக்குத் தெரியாமல் தங்களுடைய வங்கிக் கணக்குகளில் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டிருப்பதை வங்கி வாடிக்கையாளர்கள் பிறகு உணர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மகளைப் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 28 ஆண்டு சிறை
மகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய 44 வயது ஆடவருக்கு 28 ஆண்டு சிறைத் தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. தம்மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகளை ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த அந்த சிங்கப்பூர் நிரந்தரவாசி ஒப்புக்கொண்டார். தமது மகள் மூன்று வயதாக இருந்தபோது அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தத் தொடங்கியதை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார். அச்சிறுமி ஒன்பது வயதானதும் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்யத் தொடங்கியதாக அவர் கூறினார். கிட்டத்தட்ட ஏழரை ஆண்டுகளுக்கு அச்சிறுமி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார். மகள் மட்டுமின்றி மகளின் தோழியையும் அவர் விட்டுவைக்கவில்லை. அந்தச் சிறுமியும் அவரது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளத்தைக் காக்க ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பயணத்துறைக்கான ஊழியரணி, வர்த்தக உருமாற்றத் திட்டம்
தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) விருந்தோம்பல், பயனீட்டாளர் வர்த்தகக் குழுமமும் ஐந்து வர்த்தகச் சங்கங்களும் இணைந்து பயணத்துறை திறன் மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்தத் திட்டம் தொடர்பில் வர்த்தகச் சங்கங்களுக்கு சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், என்டியுசியின் பயிற்சி மற்றும் உருமாற்றப் பிரிவும் ஆதரவு வழங்குகின்றன.
கொவிட்-19க்குப் பிந்திய காலகட்டத்துக்கு பயணத்துறையைத் தயார்ப்படுத்த இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பயணத்துறை எதிர்கொள்ளும் சவால்கள், அதற்குத் தேவையான திறன்கள் ஆகியவற்றை அடையாளம் காண கிட்டத்தட்ட 20 அமைப்புகள் ஒன்றிணைந்து பயிலரங்குகளை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
உணவு ஆய்வுக்கு $23 மில்லியன்
சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும் ஆய்வுத் திட்டங்களுக்கு $23 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீன் வளர்ப்பு, காய்கறிகளைப் பயிரிடுதல் ஆகியவற்றை மேம்படுத்தும் வழிகளைப் பற்றி ஆராய 12 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆய்வும் மேம்பாட்டுத் திட்டங்களும் உணவின் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியம் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பின் தலைமை நிர்வாகி லிம் கொக் தாய் கூறினார்.

