கொவிட்-19 காலகட்டத்தில் வாழ்விடங்களுக்கான மீள்திறன் தரவரிசை
சிங்கப்பூர் கொவிட்-19 கிருமிப்பரவல் காலத்தில் வசிப்பதற்கு உலகின் ஆகச் சிறந்த இடமாக புளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் கொவிட் மீள்திறன் தரவரிசையில் இடம்பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்திருப்பது இதுவே முதன்முறை. தரவரிசையில் இதுவரை முதலிடத்திலேயே இருந்துவந்த நியூசிலாந்து இம்மாதம் இரண்டாவது இடத்துக்கு இறங்கியது.
ஆசியாவிலேயே மிகவும் வேகமான அளவில் அதன் மக்களுக்குத் தடுப்பூசிகளைக் போட்டுவரும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. இங்குள்ள மக்கள்தொகையில் சுமார் ஐந்தில் ஒரு பங்கினருக்கு ஏற்கனவே தடுப்பூசிகள் போடப்பட்டுவிட்டன. இதுவே சிங்கப்பூர் தரவரிசையில் முதலிடம் பிடித்ததற்கு முக்கிய காரணம் என்று தரவரிசை அறிக்கையில் கூறப்பட்டது. கொவிட்-19 கிருமிப் பரவலைப் பெரும் அளவில் கட்டுப்படுத்தியுள்ள நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தைவான் போன்றவற்றில் தடுப்பூசி நடவடிக்கைகள் சிங்கப்பூரைவிட மெதுவாக நடைபெற்று வருகின்றன.
மேலும், எல்லைகளைக் கட்டுப் படுத்துவது, வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவுகளைக் கடுமையாக செயல்படுத்துவது, தடுப்பூசித் திட்டத்தைத் துரிதமாகச் செயல்படுத்துவது ஆகியவற்றின் மூலம், சிங்கப்பூரில் கொவிட் 19 கிருமித் தொற்று "கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக" உள்ளது என்றும் காரணங்களாக புளூம்பெர்க் தரவரிசை அறிக்கை கூறியது.
மக்கள் பெரும்பாலும் வழக்கம் போல தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட முடிவதும் அவர்கள் இசைநிகழ்ச்சிகளுக்கும் சொகுசுக் கப்பல் பயணங்களி்லும் செல்ல முடிவதும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.
புளூம்பெர்க் கொவிட் மீள்திறன் தரவரிசையில் 53 பொருளியல்களை, பெருந்தொற்று காலத்தில் அவை வசிப்பதற்கு ஏதுவானவையா என்பதைத் தரவரிசைப்படுத்துகிறது.
இறப்பு விகிதம், கொவிட்-19 பரிசோதனைகள், தடுப்பூசிகளை எளிதில் பெறுதல், மக்கள் நடமாட்டம் உள்ளிட்ட பத்து அம்சங்களைக் கொண்டு, மிகவும் குறைவான சமூக, பொருளியல் தடைகளுடன் கிருமிப் பரவல் எங்கு மிகவும் சிறப்பாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அதில் ஆய்வு செய்யப்படுகிறது.
அதன் தடுப்பூசித் திட்டத்தைத் துரிதப்படுத்தியுள்ள அமெரிக்கா தரவரிசையில் நான்கு இடங்கள் முன்னேறி 17ஆம் இடத்தில் இருந்தது. தரவரிசையில் கடந்த மாதம் 20வது இடத்தில் இருந்த இந்தியா, பத்து இடங்கள் குறைந்து 30வது இடத்தில் இருந்தது.
தடுப்பூசிகளைப் போடுவதில் நாடுகள் மெத்தனமாக இருந்து விடக் கூடாது என்று நிபுணர்கள் எச்சரித்தனர். இருப்பினும் அது மட்டுமே கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்தப் போதாது என்றும் கூறப்பட்டது.
தடுப்பூசிகளைப் போடும் நடவடிக்கைகள் விரைவாகத் தொடங்கியபோதும், நோய்த்தடுப்புத் தன்மை மக்களிடையே போதிய அளவுக்கு பரவும் முன்னர் சில நாடுகளில் கட்டுப்பாடுகள் மிகவும் சீக்கிரமாக தளர்த்தப்பட்டன.
வசதி குறைந்த நாடுகளில் உருவான கொவிட்-19 உருமாறிகள் பரவியதால், பிரான்ஸ் சில்லி போன்ற, தடுப்பூசிகளை எளிதில் பெறக்கூடிய நாடுகளிலும் கொவிட் 19 பரவல் அதிகமானது.

