அரசாங்கம், தொழிற்சங்கங்கள், முதலாளிகள் ஆகியவற்றுக்கு இடையே வலுவான முத்தரப்புப் பங்காளித்துவம் இல்லாதிருந்தால் கொவிட் 19 கிருமித்தொற்றினால் வேலைகள் இன்னும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் என்று மனிதவள அமைச்சர் திருமதி ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார். நேற்று தமது மே தினச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
முத்தரப்புப் பங்காளித்துவம், செலவுகளைக் குறைத்து வேலை களைத் தக்கவைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை விரைந்து எடுக்க உதவியது என்று அவர் கூறினார்.
குறிப்பாக, வர்த்தகங்கள் நிலைத்திருக்கவும் வேலைகளைக் காப்பாற்றவும் முதலாளிகளும் ஊழியர்களும் ஒன்றுசேர்ந்து செயல்பட அழைப்பு விடுத்ததன் வழி, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் முந்தைய நெருக்கடி காலங்களின்போது போலவே ஆக்ககரமான தொழிற்சங்க இயக்கத்துக்கு முன்னுதாரணமாய் இருந்தது என்றார் அவர்.
முதலாளிகள் மற்ற அம்சங்களில் தங்களால் முடிந்தவரை செலவுகளைக் குறைத்தபின் வேறுவழி இல்லாதபோது, வேலை இழப்புகளைத் தவிர்ப்பதற்காக சம்பளங்களைக் குறைத்தது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க முதலாளிகளுடன் தொழிற்சங்கங்கள் சேர்ந்து பணியாற்றியதை திருமதி டியோ குறிப்பிட்டார்.
வியாபாரங்களை மறுசீரமைக்க வேண்டியிருந்தபோதும் வேலைகளைக் குறைக்கமால் சிங்கப்பூரர் களைக் கொண்ட மைய ஊழியரணியை வைத்திருக்க முதலாளிகளும் உதவியதை மனிதவள அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், கொவிட் 19 உதவிநிதியைத் தொடங்கி, சிரமத்தை எதிர்நோக்கிய அதன் உறுப்பினர்களுக்கு உதவ ஒரே முறை வழங்கப்படும் $300 நிதியுதவியை அளித்ததாகவும் அவர் சொன்னார்.
அத்துடன், சுயதொழில் செய்பவர்கள் திறன்பயிற்சிக்குச் சென்ற காலகட்டத்தில் அவர்களுக்குப் படித்தொகையை வழங்க பயிற்சி நிதியைத் தொழிற்சங்க காங்கிரஸ் தொடங்கியது.
சுயதொழில் புரிவோருக்கான வருமான நிவாரணத் திட்டத்தையும் அது நிர்வகித்தது.
அந்த நடவடிக்கைகளும், தொழிற்சங்கங்கள், முதலாளிகள், அரசாங்கம் ஆகிய தரப்புகளுடன் சேர்ந்து பணியாற்றி மாற்றங்களை விரைந்து நடப்புக்குக் கொண்டு வரும் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் ஆற்றலுடன் சேர்ந்து நெருக்கடிநிலையின் பாதிப்பைக் குறைக்க உதவின என்று திருமதி டியோ கூறினார்.
இந்த வலுவான முத்தரப்பு ஒத்துழைப்புணர்வு, பெருந்தொற்றின் பாதிப்பைக் குறைக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை முழுமைப் பெறச் செய்தததில் சிங்கப்பூர் கொடுத்து வைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நெருக்கடியைச் சமாளிக்கும் நடவடிக்கைகளை எடுக்க நாடு களுக்கு சுலபமாக இருக்கவில்லை என்பதை நாம் பார்த்தோம் என்றும் திருமதி டியோ சொன்னார்.
"உதாரணத்துக்கு, கொவிட் 19 கிருமித்தொற்றைச் சமாளிக்க பிரெஞ்சு அரசாங்கம் எடுத்த நட வடிக்கைகளை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நாடுதழுவிய வேலை நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்தன. அதனால் பல அத்தியாவசியச் சேவைகள் தடைபட்டன."
எதிர்காலத்தில், சிங்கப்பூரின் முத்தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த, ஒருசேர வர்த்தகங்களுக்குச் சாதகமாகவும் ஊழியர்களுக்குச் சாதகமாகவும் நடந்துகொள்ள அரசாங்கம் எப்போதும் முயலவேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

