முகம் பார்த்து நலம் சொல்லும் செயலி
முகத்தை ஸ்கேன் செய்து, உடல்நலத்தைக் கண்டறியும் ஒரு கைபேசிச் செயலியை சிங்கப்பூரைச் சேர்ந்த புதிய சுகாதாரத் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது. அதன்வழி இந்த கொவிட்-19 கிருமித்தொற்று காலத்தில், ஊழியர்கள் வேலைக்குச் செல்லும் முன் அவர்கள் உடல்நலத்துடன் இருப்பதைக் கண்டறிவது இன்னும் எளிதாகக் கூடும்.
'அவேர்னஸ் ஏஐ' எனும் அந்தச் செயலி வழி, ஒருவர் கைபேசியில் உள்ள புகைப்படக் கருவியில் தமது முகத்தை சுமார் ஒரு நிமிடத்துக்குக் காட்டி வருடவேண்டும். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதா என்பதை செயலி கண்டறியும்.
மூத்தோருக்கு உதவும் 'அவுட்சைட்'
தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் 'அவுட்சைட்' என்னும் செயலி, உணவு வாங்குவதற்கும் தங்களுக்குத் தேவையான சேவை நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமூக ஊடகமான இந்தச் செயலியை மூத்தோரும் எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்த, 'அவுட்சைட் டெக்னாலஜிஸ்' நிறுவனத்திற்கு அரசாங்கம் ஊக்கத்தொகை அளித்துள்ளது.
தனித்து வாழும் முதியோர்கள் தங்களுக்கு உதவி தேவைப்படும் தொண்டூழியர்களை எளிதாக தேடிக் கண்டுபிடிக்கும் வகையில் இந்தச் செயலியை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனமான 'அவுட்சைட்ஸ் டெக்னாஜிஸ்'. அரசாங்கத்தின் திறந்தவெளி புத்தாக்கத் திட்ட உதவியுடன் 'என்விபிசி' என்னும் தேசிய தொண்டூழியம் மற்றும் கொடையாளர் நிலையத்துடன் இணைந்து அந்நிறுவனம் இந்தச் செயலி உருவாக்கத்தில் இறங்கியுள்ளது.
106 பாலர் பள்ளிக் குழந்தைகளுக்கு வயிற்றுக் கோளாறு
பாய லேபாரில் உள்ள பாலர் பள்ளி ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த மாதத் தொடக்கத்தில் வயிற்றுக்கோளாறு ஏற்பட்டதாக நேற்று சுகாதார அமைச்சும் பாலர் பருவ மேம்பாட்டு வாரியமும் தெரிவித்தன. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவை தெரிவித்தன.
இந்தச் சம்பவத்தில் 'சூப்பர் லேண்ட்' பாலர் பள்ளியைச் சேர்ந்த சிறார்களும் உள்ளடங்குவர். பாதிக்கப்பட்ட குழந்தைகளில் முக்கால்வாசிக் குழந்தைகள் குணமடைந்து பள்ளி திரும்பிவிட்டனர். ஒரு குழந்தை மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியதாக பாலர்பருவ மேம்பாட்டு வாரியம் தெரிவித்தது.
செம்பவாங் பள்ளிவாசல்
3 நாட்களுக்கு மூடல்
செம்பவாங்கில் உள்ள பெத்தெம்பாத்தான் மலாயு செம்பவாங் பள்ளி வாசல், தொற்றுக்கு எதிரான சுத்தப்படுத்தும் பணிக்காக இரண்டு நாட்கள் மூடப்படும் என்று முயிஸ் நேற்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது. கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் பள்ளிவாசலுக்கு வருகை மேற்கொண்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முயிஸ் தெரிவித்தது.

