செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
02011083-18b1-48c0-8456-75b4fb6e5c34
-

ஷெங் சியோங் முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் 6.5% உயர்ந்தது

பல்பொருள் அங்காடி நிறுவனமான 'ஷெங் சியோங்', மார்ச் 31ஆம் தேதியுடன் முடிந்த அதன் முதல் காலாண்டில்

$30.9 மி. லாபம் ஈட்டியதாக நேற்று முன்தினம் தெரிவித்தது. இது சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6.5% அதிகம். நிறுவனத்தின் வருவாயும் ஆண்டு அடிப்படையில் 2.7% அதிகரித்ததாக கூறப்பட்டது. 2020 நிதியாண்டின் முதல் காலாண்டில் $328.7 மி. வருவாய் பதிவானதாகவும் இவ்வாண்டின் அதே காலகட்டத்தில் $337.5 மி. வருவாய் பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டது. வருவாய் அதிகரிப்புக்குக் காரணம், சென்ற ஆண்டு புதிதாக திறக்கப்பட்ட ஐந்து புதிய கிளைகளே என்றது நிறுவனம். இதற்கிடையே நேற்று முன்தினம் நிறுவனத்தின் பங்குகளும் 1% அதிகரித்து $1.56 விற்றது.

பாசிர் ரிஸ் நிலைய வேலைகளுக்கு $980 மி. மதிப்பிலான ஒப்பந்தம்

குறுக்கு ரயில் பாதையில் அமையவுள்ள பாசிர் ரிஸ் எம்ஆர்டி நிலைய கட்டுமான வேலைகள் நான்காம் காலாண்டில் தொடங்கவுள்ளன. இந்நிலையம் 2030ல் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குரிய $980 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தை, 'டேவூ இன்ஜினியரிங் & கன்ஸ்ட்ரக்‌ஷன்' மற்றும் 'டொங்கா ஜியோலோஜிகல் இன்ஜினியரிங்' நிறுவனங்களுக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கியுள்ளது. இரு கொரிய நிறுவனங்களும் இணைந்து பாசிர் ரிஸ் நிலையத்தையும் அதன் சுரங்கப் பாதைகளையும் வடிவமைத்துக் கட்டுவதுடன் கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் தற்போது செயல்பட்டு வரும் பாசிர் ரிஸ் நிலையத்தில் தேவையான மாற்றங்களையும் செய்யும்.

'பிஎஸ்பி' இளையர் பிரிவு தலைவர் டெரன்ஸ் சூன் பதவி விலகல்

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (பிஎஸ்பி) இளையர் பிரிவுத் தலைவர் டெரன்ஸ் சூன் (படம்), வேலை மற்றும் குடும்பச் சூழல் கருதி தம் பதவியை விட்டு விலகுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டில் வேலைவாய்ப்பு அமைந்ததுடன், தமது இளம் குடும்பத்திற்காக மேலும் பிரகாசமான ஓர் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக இம்முடிவை எடுத்து உள்ளதாக கட்சித் தலைமைச் செயலாளர் பிரான்சிஸ் யுவென்னுக்கு எழுதிய கடிதத்தில், திரு சூன் குறிப்பிட்டிருந்தார். 2020 பொதுத் தேர்தலில் திரு சூன் இடம்பெற்ற ஐந்து உறுப்பினர் அணி, தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் போட்டியிட்டு, 36.9% வாக்குகளைப் பெற்றிருந்தது.