தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், மலேசியத் தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இருவரும் நேற்று தங்கள் முதலாவது இருதரப்பு கூட்டத்தில் காணொளி வழியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான வலுவான தற்காப்பு உறவை மறுஉறுதிப்படுத்திக் கொண்டதுடன், 50 ஆண்டு நிறைவை நாடும் ஐந்து நாட்டுத் தற்காப்பு ஏற்பாட்டுத் திட்டத்துக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்துக்கொண்டனர்.
ஐந்து நாட்டுத் தற்காப்பு ஏற்பாட்டுத் திட்டத்தில் அங்கம் வகிக்கும் ஐந்து நாடுகள் பங்கேற்கும் முழு அளவிலான பெர்சாமா லீமா பயிற்சி நடைபெறுவதை கொவிட்-19 நிலைமை தடுத்திருந்தாலும், இவ்வாண்டு சிறிய அளவிலான பயிற்சி நடத்தப்படும். இது, பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு ஐந்து நாடுகளும் கொண்டுள்ள வலுவான கடப்பாட்டை வெளிப்படுத்தும் அறிகுறியாக கருதப்படுகிறது.
ஐந்து நாட்டுத் தற்காப்பு ஏற்பாட்டுத் திட்டத்தில் சிங்கப்பூர், மலேசியா தவிர, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
நேற்று சந்தித்த இரு நாட்டு அமைச்சர்களும் தங்கள் ஆயுதப்படைகளுக்கிடையே இருந்துவரும் தற்காப்பு உறவுகளை வலுப்படுத்தி, கட்டிக்காக்க தங்கள் நாடுகளின் கடப்பாட்டை வெளிப்படுத்தினர் என்று சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சின் அறிக்கை கூறியது.
"இரு ஆயுதப்படைகளும், கொவிட்-19 கொள்ளைநோய் பரவல் நிலைமை மேம்பட்டவுடன், இருதரப்பு, பலதரப்பு தற்காப்பு ஈடுபாடுகளையும் பயிற்சிகளையும் மீண்டும் தொடங்க உறுதி தெரிவித்தன," என்று அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பொதுவான பாதுகாப்புச் சவால்கள், குறிப்பாக, பயங்கரவாதம், இணையப் பாதுகாப்பு, கடல்துறைப் பாதுகாப்பு ஆகியவை பற்றியும் இரு தற்காப்பு அமைச்சர்களும் பேசினர். எல்லை தாண்டிய மிரட்டல்களை எவ்வாறு முறியடிப்பது என்பது பற்றியும் விவாதித்த அமைச்சர்கள், அவற்றை எதிர்கொள்ள மற்ற வட்டார நாடுகளுடன் ஒத்துழைப்பதன் மூலம் அதை சாதிக்கலாம் என்றும் கூறினர்.
ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டம் (எடிஎம்எம்) மற்றும் ஆசியானின் பத்து நாடுகள், எட்டு கலந்துரையாடல் பங்காளிகள் (எடிஎம்எம் பிளஸ்) ஆகிய தளங்கள் மூலம் வட்டார நாடுகளை ஒன்றிணைக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பெர்சாமா லீமா பயிற்சி கடந்த முறை 2019 அக்டோபரில் நடந்தது. அதை மலேசியா ஏற்று நடத்தியது. அதில் ஐந்து நாடுகளின் 3,000 ராணுவப் படை வீரர்கள் பங்கேற்றனர். அந்த 17 நாள் பயிற்சியில் வழக்கமான போர் பயிற்சிகள், கடல்துறை பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகள் ஆகியவையும் இடம்பெற்றன.
நேற்றைய சந்திப்பில் டாக்டர் இங், அமைச்சர் இஸ்மாயிலை ஜூன் மாதம் நடைபெறும் 19வது ஷங்ரிலா கலந்துரையாடல் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். அது அமைச்சர் இஸ்மாயில் சிங்கப்பூருக்கு மேற்கொள்ளும் முதலாவது அதிகாரத்துவ பயணமாகவும் விளங்கும்.

