சிங்கப்பூரில் உள்ள சந்தேகத்திற்கு இடமான வங்கிக் கணக்குகள் வழியாக நடைபெற்ற பண மாற்ற நடவடிக்கையை அதிகாரிகள் இடைமறித்து தடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2019ஆம் ஆண்டு முதல் அவ்வாறு இடைமறிக்கப்பட்ட பணமாற்றத்தின் அளவு $69 மில்லியன் என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் 'கொள்கை, பணம் செலுத்துதல் மற்றும் நிதிக் குற்றம்' பிரிவு துணை நிர்வாக இயக்குநர் திருவாட்டி லூ சியூ யீ கூறினார்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுவதற்கு எதிரான சிறப்பு நிபுணர்களின் சங்கம் ஏற்பாடு செய்த மாநாடு ஒன்றில் பங்கேற்றுப் பேசியபோது அவர் இந்த விவரத்தை வெளியிட்டார்.
இந்த சட்டவிரோத பணப் பரிமாற்ற நடவடிக்கையை வர்த்தக விவகாரத் துறை, சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகியவற்றுடன் இங்குள்ள முக்கிய வங்கிகளும் இணைந்த கூட்டு முயற்சியால் இடைமறிக்க உதவியதாக அவர் கூறினார்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுவதற்கு எதிராகவும் பயங்கரவாத நிதியளிப்பை முறியடிக்கவும் ஏசிஐபி என்னும் தொழில்துறை பங்காளித்துவம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் வழியாக சில குறிப்பிட்ட சம்பவங்களில் துப்பு துலக்கவும் மேற்கொண்டு பகுப்பாய்வு நடத்தவும் 2019ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக விவகாரத் துறையும் முக்கிய வங்கிகளோடு இணைந்து பணியாற்றியதாக திருவாட்டி லூ தெரிவித்தார்.
மேலும் இத்தகைய அணுக்கமான கூட்டு ஒத்துழைப்பு, பகுப்பாய்வுத் தரவுகளின் ஆற்றல்மிக்க பயன்பாடு ஆகியன நிதிக் குற்றங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் முயற்சிகளில் வெற்றியை ஈட்டித் தந்துள்ளதாக அவர் கூறினார்.
$69 மில்லியன் சட்டவிரோதப் பணமாற்ற நடவடிக்கையில் ஊடுருவியதன் மூலம் இங்கு அனுப்பி வைக்கப்பட்ட $19 மில்லியனுக்கும் மேற்பட்ட பணமாற்ற நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட திருவாட்டி லூ, சந்தேகத்திற்கு இடமான கணக்குகளை அடையாளம் காண்பதில் வங்கிகள் துடிப்புடன் செயல்பட்டதன் காரணமாக இது சாத்தியமானதாகத் தெரிவித்தார்.

