கீழ்ப்படியாது முரண்டுபிடிக்கும் குணம் கொண்ட பதின்ம வயது குற்றவாளி ஒருவருக்கு நேற்று மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனையும் எட்டு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
தமக்காக சிகரெட் வாங்கித் தர மறுத்த ஆடவர் ஒருவரை கத்தி யால் தாக்கிய குற்றத்தை ஜேம்ஸ் டெக் ஜிங் யு என்னும் அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தண்டனை அறிவிக்கப்பட்டது.
இம்மாதம் 19 வயதைத் தொடும் அந்த இளையர் வேலை எதுவும் இல்லாமல் இருந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பூன் லே பிளேஸில் உள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடிக்குள் நுழைய காத்திருந்த லீ ஜிங் சுவென், 23, என்னும் ஆடவரை அணுகி தமக்காக சிகரெட் வாங்கித் தருமாறு ஜேம்ஸ் டெக் கேட்டார். ஆனால் அதற்கு லீ மறுத்தார்.
மீண்டும் மீண்டும் அவரிடம் கேட்டபோதும் சிகரெட் வாங்கித் தர மறுத்துவிட்டார். அதனால் ஆத்திரமுற்ற ஜேம்ஸ் டெக் கத்தியை எடுத்து லீயின் முகத்தில் தாக்கத் தொடங்கினார். அதிலிருந்து தப்பிக்க முயன்ற லீ உதவி கேட்டு கத்தினார்.
ரத்தம் சொட்டச் சொட்ட பேரங்காடிக்குள் ஓடிய லீயை அந்த இளையர் துரத்திப் பிடித்து மீண்டும் கத்தியால் தாக்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
திரும்ப பழைய நிலையை அடையமுடியாத அளவுக்கு முகச் சிதைவும் தழும்பும் ஏற்பட தாக்குதல் காயங்கள் காரணமாக இருந்ததாக மருத்துவ அறிக்கை குறிப்பிட்டது.
ஜேம்ஸ் டெக் 13 வயதாக இருந்தபோதே பெற்றோருக்கு அடங்காத பையன் என்றும் அவரை ஒழுக்கமானவராக வைத்திருக்க இயலவில்லை என்றும் அவரது பெற்றோர் புகார் தெரிவித்து இருந் தனர். அதனைத் தொடர்ந்து சிறுவர் இல்லத்திற்கு ஜேம்ஸ் டெக் அனுப்பப்பட்டார்.
அங்கிருந்து தப்பித்துச் சென்று கொள்ளையடித்ததோடு காயம் ஏற்படுத்திய குற்றங்களுக்காக 2018 ஏப்ரல் 25ஆம் தேதி சீர்திருத்தப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டார் அந்த இளையர். 2020 பிப்ரவரியில் வெளியில் வந்த எட்டு மாதத்தில் கத்தித் தாக்குதலில் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.