இனம் குறித்து பயணிகளிடம் கேட்ட பெண் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்

1 mins read
27a6c932-a648-45de-886c-b9db5e44c498
-

பெருவிரைவு ரயில் வண்டியில் சக பயணிகளின் இனம் குறித்து தொடர்ந்து கேள்வி கேட்ட 57 வயது பெண் பயணி, தமது வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அத்துடன் அவரது யூடியுப் ஒளிவழியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பெண் ரயிலில் நடந்துகொண்ட விதம் பற்றி தங்களிடம் ரிவிக்கப்பட்டதாக 'நைட் பிராங்க்' சொத்து நிறுவனம் நேற்று தனது பேஸ்புக் பக்கப் பதிவில் குறிப்பிட்டது.

"மக்களிடமும் சமூகத்திற்கும் பொறுப்பான முறையில் நடந்துகொள்வது நைட் பிராங் நிறுவனத்தின் முக்கிய கோட்பாடுகளில் ஒன்றாக உள்ளது. சிங்கப்பூரின் அஸ்திவாரத்திற்கு மிரட்டலாக விளங்கும் இனவாதத்தையும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சுகளையும் இந்நிறுவனம் பொறுத்துக்கொள்ளாது," என்று நைட் பிராங்க் தெரிவித்தது.

இதனுடன் அந்தப் பெண்ணின் யூடியுப் ஒளிவழியும், பிறருக்குத் தொல்லை கொடுத்ததன் காரணமாக ரத்து செய்யப்பட்டது. 29 காணொளிகளை உள்ளடக்கிய அந்த ஒளிவழியில் ஒரு காணொளி தவிர மற்றவை இனவாதத்தைத் தூண்டும் விதமாக இருப்பவை.

கிழக்கு மேற்கு எம்ஆர்டி ரயில் ஒன்றில் ஏப்ரல் 21ஆம் தேதியன்று காணொளியில் அந்தப் பெண், பயணிகளை அவர்களது இனம் குறித்த கேள்விகளைக் கேட்டு அவர்களைப் பற்றி காணொளி எடுத்தனர். அந்தப் பெண், தாம் ஹுவா சோங் தொடக்கக் கல்லூரியில் படித்த மாணவி எனத் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் புகார்கள் செய்யப்பட்டிருப்பதாக போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.