சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி, 2021ஆம் ஆண்டில் ஆறு விழுக்காட்டுக்கும் மேல் இருக்கலாம் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் கூறியுள்ளது. இருப்பினும், வெவ்வேறு துறைகளில் மீட்சி அளவு சமமற்றதாக இருக்கும் என்று அது தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டின் முதல் பாதியில் இழந்த உற்பத்தியை, சிங்கப்பூர் பொருளியல் ஓரளவுக்கு மீட்டுக்கொண்டுள்ளது. இருப்பினும், 2021ன் முதல் காலாண்டில் அதன் வளர்ச்சி அடையும் வேகத்தில் தளர்வு ஏற்பட்டுள்ளது. முன்னுரைக்கப்பட்டதைக் காட்டிலும் பல துறைகளில் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி, சமமற்ற நிலையில் அமைந்துள்ளதாக ஆணையம் நேற்று வெளியிட்ட அதன் ஈராண்டு பரந்துபட்ட பொருளியல் ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
உற்பத்தித் துறைக்கான வாய்ப்புகள் சற்று கூடுதலாகி இருந்தாலும் விமானப் போக்குவரத்து, ஹோட்டல் துறைகள் போன்றவற்றுக்கான வாய்ப்புகள் இன்னும் மோசமாகியுள்ளன. நாட்டு எல்லைகள் விரைவில் திறக்கப்படும் சாத்தியத்தை, அனைத்துலக அளவில் அதிகரித்து வரும் கொவிட்-19 சம்பவங்களும் ஆங்காங்கே முளைக்கும் உருமாறிய கிருமிகளும் குறைத்துக்கொண்டே வருகின்றன.
2019க்கு நிகராக பயனீட்டாளர் செலவில் மாற்றம் இல்லை
இதற்கிடையே, கொவிட்-19 கொள்ளைநோய் சூழலிலும் சென்ற ஆண்டு பயனீட்டாளர்கள் செய்த செலவு, 2019ஆம் ஆண்டுக்கு ஒப்பாக இருந்ததாக ஆணையத்தின் ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. சிங்கப்பூரில் வசிப்போர், பயணக் கட்டுப்பாடுகளால் தங்களின் செலவுகளை இங்கேயே செய்தது இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
ஆனால், ஒட்டுமொத்த தனிப்பட்ட செலவுகள், கொள்ளைநோய்க்கு முந்தைய அளவைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது. சிங்கப்பூர்வாசிகள் தங்களின் சேமிப்புகளை இதன் மூலம் அதிகமாக்கிக்கொண்டதாக ஆணையம் குறிப்பிட்டிருந்தது. தடையற்ற வர்த்தக உடன்பாடு மூலம் பலன்
இந்நிலையில், வட்டார நிலையிலான விரிவான பொருளியல் பங்காளித்துவம் (ஆர்சிஇபி) மூலம் சிங்கப்பூரும் வட்டார நாடுகளும் பலனடையவுள்ளதாக ஆணையம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. உலகின் ஆகப் பெரிய வர்த்தக உடன்பாடான இதன் மூலம், குறைந்த கட்டணங்கள், ஒருங்கிணைக்கப்பட்ட வர்த்தக விதிமுறைகள் நிலவும்.
அத்துடன் அனைத்துலக விநியோகத் தொடர்களில் சிங்கப்பூரும் வட்டார நாடுகளும் கூடுதல் பங்காற்றிப் பலன் பெறும் என்று அறிக்கை கூறியுள்ளது. 'ஆர்சிஇபி' மூலம் வட்டார வர்த்தகப் போக்குவரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லை தாண்டிய உற்பத்தித் தொடர்புகளும் 15 நாட்டுப் பொருளியல்களுக்கிடையே வலுவாகும் என்று கூறப்படுகிறது. 10 ஆசியான் நாடுகளுடன் ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், நியூசிலாந்து, தென்கொரியா ஆகியவையும் இணைந்து உருவாகியதுதான் இந்த 'ஆர்சிஇபி'. உலக மக்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றில் 30 விழுக்காட்டுக்கு இந்த பங்காளித்துவம் ஈடாகும்.

