'வெளிநாட்டுப் பயணம் எளிதாகலாம்'

'வெளிநாட்டுப் பயணம் எளிதாகலாம்'

2 mins read
1180374f-3e6d-4eb3-ac44-ec1cff0a6388
கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூர் மக்கள், குறைந்த அளவு தொற்று பதிவான நாடுகளுக்குச் சென்று நாடு திரும்பும்போது அவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து சிங்கப்பூர் பரிசீலிக்கலாம் என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூருக்கும் ஹாங்காங்குக்கும் இடையிலான பயண ஏற்பாட்டின்படி மே 26ஆம் தேதியில் இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு இரு நாடுகளிலும் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல் மேலும் பயணங்களுக்கு வழிவிடும் வகைகளை சிங்கப்பூர் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் ஓங் இன்று தெரிவித்தார்.

பிரிட்டன், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகள் ஏற்கெனவே சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளித்துள்ளன என்று அமைச்சர் ஓங்

91.3 எஃப்.எம். வானொலிக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்தார். பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதனையடுத்து அந்நாடுகளில் கொவிட்-19 தொற்றுப் பாதிப்பு குறைந்து வருகிறது. இருந்தாலும் சிங்கப்பூரில் அந்நாட்டுப் பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் அந்த அளவுக்கு அந்நாடுகளில் தொற்று குறையவில்லை.

அந்நாட்டுப் பயணிகளுக்கு இங்கு தனிமைப்படுத்தலில் விலக்கு அளிப்பதற்கு அந்நாடுகளில் தொற்றுப்பாதிப்பு பூஜ்யத்தில் இருக்க வேண்டுமென்பதில்லை.

மேலும் குறைவான அளவுக்கு தொற்றுப் பாதிப்பு கொண்டுவரப்பட்டால் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்கள் அந்நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவது குறித்து பரிசீலிக்கலாம். மீண்டும் அவர்கள் சிங்கப்பூருக்குத் திரும்புகையில் தனிமைப்படுத்தலுக்குப் பதிலாக கொவிட்-19 சோதனை செய்துகொள்ளலாம் என்று அவர் கூறினார். சிங்கப்பூருக்கும் ஹாங்காங்குக்கும் இடையிலான பயண ஏற்பாடுகள் வெற்றிபெற்றால் அது மற்ற நாடுகளுக்கும் முன்மாதிரியாக இருக்கும் என்றார் அமைச்சர்.

வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தேவை அதிகம் இருந்தபோதும், தொற்றுச் சூழல் தொடர்ந்து மாறிவருவதால் கவனம் தேவை என்று திரு ஓங் எச்சரித்தார்.