ஊழியர் சந்தை நிலவரம் குறித்து மனிதவள அமைச்சின் முன்னோட்ட அறிக்கை
கொவிட்-19 கொள்ளைநோய் பரவலின் தாக்கத்திலிருந்து சிங்கப்பூர் வேலைச் சந்தை இந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களாக மீட்சி அடைந்து வருகிறது. நோய்ப்பரவல் தொடங்கியதிலிருந்து முதன்முறையாக இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வேலைவாய்ப்புகள் முன்னேற்றம் அடைந்துள்ளன.
தகவல் தொடர்பு, நிதிச் சேவைகள், நிபுணத்துவ சேவைகள் உள்ளிட்ட சேவைத் துறைகள் அதிகமானோரை வேலையில் அமர்த்தியது.
கட்டுமானத் துறையிலும் வேலை வாய்ப்புகள் சற்றுக் கூடியது. உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகள் தொடர்்ந்து சரிவையே கண்டன. ஒட்டுமொத்தமாக குடியிருப்பாளர்களின் வேலைவாய்ப்பு மிதமான முன்னேற்றம் கண்டது. குடியிருப்பாளர் அல்லாதோருக்கான வேலைவாய்ப்புகள் எல்லாத் துறைகளிலும் சரிவைக் கண்டது.
வேலைச் சந்தை நிலவரம் குறித்து மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட முன்னோட்ட அறிக்கை இந்த விவரங்களைத் தெரிவித்தது.
ஊழியர் சந்தை மீட்சியடைந்து வருவதில் இது ஒரு "குறிப்பிடத்தக்க திருப்பம்" என்று என்டியுசி கற்றல் மையத்திற்கு நேற்று வருகையளித்த மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறினார்.
"முதலாளிகளிடையே நம்பிக்கை ஏற்பட்டு, அது தொடர்ந்து வளர்ந்து வருவதை இது காட்டுகிறது," என்றார் அவர்.
இதற்கிடையே, இங்குள்ள வேலையின்மை, கடந்த ஆண்டு செப்டம்பரில் 3.5 விழுக்காடாக உயர்ந்தது. அது தொடர்ந்து குறைந்து வந்தாலும், தொற்றுநோய்க்கு முந்தைய நிலையைவிட அதிகமாகவே உள்ளது.
மார்ச் மாதத்தில் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 2.9 விழுக்காடாக இருக்கலாம் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
குடியிருப்பாளர்களிடையே வேலையின்மை விகிதமும் ஜனவரி மாதத்தில் 4.3 விழுக்காட்டிலிருந்து மார்ச் மாதத்தில் 4 விழுக்காடாகக் குறைந்தது. இதனால், மார்ச் மாதத்தில் வேலையில்லாத குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 95,500 ஆனது.
சிங்கப்பூரர்களிடையே, வேலையில்லாதோர் விகிதம் ஜனவரி மாதத்தில் 4.5 விழுக்காட்டிலிருந்து மார்ச் மாதத்தில் 4.2 விழுக்காடாகக் குறைந்தது.
2020ன் மூன்றாம் காலாண்டில் உச்சநிலைக்குச் சென்றபின், கிருமிப்பரவலுக்கு முந்தைய நிலைக்கு, ஆட்குறைப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது காலாண்டாகக் குறைந்து வருவதையும் அமைச்சின் முன்னோட்ட மதிப்பீடுகள் காட்டுகின்றன.
இதேபோல், கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் 1,000 ஊழியர்களுக்கு 2.8 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட அளவு குறைந்து, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 1,000 ஊழியர்களுக்கு 1.1 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
எனினும், தொடர்ச்சியான மறுசீரமைப்பு, வர்த்தகங்கள் மாற்றியமைக்கப்படுவது காரணமாக வேலை மாற்றங்கள் தொடர்ந்து இடம்பெறலாம் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
முதற்கட்ட மதிப்பீடுகள் பரந்த அடிப்படையிலான மீட்சி, ஊக்கமளிக்கும் அறிகுறிகளைக் காட்டுகின்றன என்றாலும், ஊழியர் சந்தை இன்னும் கொவிட்-19க்கு முந்தைய நிலைமைக்கு முழுமையாக திரும்பவில்லை என்று அமைச்சின் அறிக்கை சுட்டியது.
"தொடர்ச்சியான பயணக் கட்டுப்பாடுகளின் விளைவாக, கட்டுமானம், விருந்தோம்பல் போன்ற துறைகளில் பணியமர்த்தல் குறைகிறது. வேலையின்மை விகிதங்கள் குறைந்துள்ளன என்றாலும் தொற்றுநோய்க்கு முன்பைவிட அதிகமாகவே உள்ளது" என்று அது கூறியது.
வொர்க் பாஸ் அட்டை வைத்திருப்பவர்களின் வருகையை பாதிக்கும் பயணக் கட்டுப்பாடுகளால் ஊழியர் சந்தை தொடர்ந்து சவால்களை எதிர்கொள்ளும். மேலும் வர்த்தக மாற்றங்களின் விளைவாக வேலைகளை மாற்றுவதாலும் சவால்கள் தொடரும்.
நிறுவனங்களிடம் நடத்தப்பட்டு வரும் கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், வர்த்தக மனப்போக்கு பொதுவாக நம்பிக்கையானதாக இருப்பதாக அமைச்சு தெரிவித்தது. மார்ச் மாதத்தில், கருத்துக்கணிப்பில் பங்கேற்ற நிறுவனங்களில் 73% வேலைக்கு ஆட்களை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறின. இந்த அளவு கடந்த ஆண்டு டிசம்பரில் 65% ஆக இருந்தது.
டிசம்பரில் 2.8 விழுக்காடாக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க விரும்பும் நிறுவனங்களின் விகிதம் 2.2 விழுக்காடாகக் குறைந்தது. அதே நேரத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு 2.8 விழுக்காடாக இருந்த சம்பளத்தைக் குறைக்கவுள்ளதாகக் கூறிய நிறுவனங்களின் எண்ணிக்கை 3.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, வர்த்தக மறுசீரமைப்பின் விளைவாக புதிய திறன்கள் தேவைப்படும் வேலைகளுக்கு உள்ளூர் மக்களை பணியமர்த்துவது குறித்து அதிகமான முதலாளிகள் பரிசீலித்து வருவதாக அமைச்சர் டியோ குறிப்பிட்டார்.
என்டியுசி கற்றல் நிலையம் வழங்கும் வகுப்புகள் மூலம் புதிய திறன்களைப் பெறுமாறு வேலை தேடுபவர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

