இஸ்தானா மே 13ஆம் தேதியன்று பொதுமக்களுக்காக திறந்திருக்கும்
தொழிலாளர் தினம், நோன்புப் பெருநாள் இரண்டையும் அனுசரிக்கும் விதமாக அதிபர் மாளிகை வளாகம், மே 13ஆம் தேதியன்று பொதுமக்களுக்காக திறந்துவிடப்படும்.
சென்ற ஆண்டு கொவிட்-19 கொள்ளைநோயால் இவ்விரு தினங்களன்றும் அதிபர் மாளிகை திறக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக நோன்புப் பெருநாளை முன்னிட்டு அதிபர் ஹலிமா யாக்கோப், இணையச் சுற்றுலா ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இவ்வாண்டு இஸ்தானா வளாகம் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டாலும் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் நடைமுறைப் படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இன்று காலை 10 மணி முதல் இலவச நுழைவுச்சீட்டுகளுக்காக இணையம் வழி முன்பதிவு செய்யலாம்.
'சூயஸ் கால்வாய் சம்பவத்தால் ஏற்பட்ட தடை நீங்கிவிட்டது'
உலகின் மிக முக்கிய கடல்வழிப் பாதைகளில் ஒன்றான சூயஸ் கால்வாயில் சரக்குக் கப்பல் ஒன்று தரைதட்டி கால்வாயின் குறுக்கே நின்றுபோனதால் கப்பல் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, 45 கொள்கலன்கள் தாமதமாக சிங்கப்பூரை வந்தடைந்தன. அவை அனைத்திலும் இருந்த சரக்குகள், கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்குப் பின், சேரவேண்டிய இடங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக 'பிஎஸ்ஏ சிங்கப்பூர்' பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் உற்பத்தி சம்மேளனத்தின் கீழ் இயங்கும் உறுப்பு நிறுவனங்கள் அனைத்தும் இக்குறிப்பிட்ட வர்த்தகப் பாதையைப் பயன்படுத்தாததால், இச்சம்பவத்தால் பாதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
மத்திய சேம நிதி தொடர்பிலான புதிய தொண்டூழியர் திட்டம்
மத்திய சேம நிதி, அது தொடர்பான பொய்த் தகவல்கள், மத்திய சேம நிதிச் சேவைகளை மேம்படுத்துவதற்கான கருத்து தெரிவிப்பு போன்ற அம்சங்கள் குறித்துத் தங்களின் நண்பர்களுடன் தகவல் பகிர்ந்துகொள்ளும் புதிய திட்டத்தின்கீழ் 800க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் இணைந்துள்ளனர்.
மத்திய சேம நிதிக் கழகத்தின் புதிய 'கம்யூனிட்டி பேயிங் இட் ஃபார்வர்ட்' இயக்கத்தை மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார். மத்திய சேம நிதியின் பலன்களை மிகவும் தாமதமாக அறிந்தவர்கள் பலர் நம்மிடையே இருப்பதால், விழிப்புணர்வை முன்னதாக ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டது என்றார் கழகத்தின் தலைமை நிர்வாகி அகஸ்டின் லீ. தொண்டூழியர்களுக்குக் கூடுதல் ஆதரவு அளிக்கும் வகையில் 'சிபிஎஃப் வாலண்டியரிங்' என்ற செயலியும் அமைந்திடும் என்றது கழகம்.
மின்னிலக்கப் பிரிவினையை
கடப்பது குறித்து அமைச்சர் ஈஸ்வரன்
மின்னிலக்க உருமாற்றத்தை உலகம் முழுவதும், கொவிட்-19 துரிதப்படுத்திவிட்டாலும், மின்னிலக்கப் பிரிவினை ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளதாக தகவல், தொடர்பு அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் நேற்று முன்தினம் கூறினார்.
இந்நிலையில் மின்னிலக்க எதிர்காலம் ஒன்றை உருவாக்க, ஐநா உறுப்பு நாடுகளுடன் சிங்கப்பூர் தொடர்ந்து அணுக்கமாகச் செயல்படவுள்ளதாக அவர் கூறினார். அனைவரையும் உள்ளடக்கிய, புத்தாக்கத்துடன் இயங்கக்கூடிய ஓர் எதிர்காலமாக அது அமைந்திடும் என்று ஐநா பொதுக்கூட்டத் தலைவர் வொல்கன் பொஸ்கிர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின்போது திரு ஈஸ்வரன் கூறினார்.
சிங்கப்பூரின் 'மின்னிலக்க ஆயத்தநிலை வரைவுத் திட்டம்', அனைவரையும் மின்னிலக்க ரீதியில் உள்ளடக்குவது தொடர்பில் மற்ற நாடுகளுக்கு ஒரு பயனுள்ள மேற்கோளாக இருக்கலாம் என்றும் அமைச்சர் பகிர்ந்துகொண்டார்.

