சிங்கப்பூர் நில ஆணையம் ஆளில்லா விமானம் மூலம் தென் தீவுகளில் சோதனை மேற்கொள்ளும் தனது திட்டத்தைக் கடந்த வாரம் தொடங்கியது.
செரிங்காட் தீவில் இருந்து அந்தத் தீவையும் அதன் சுற்றுவட்டாரத்தையும் அதிகாரிகள் இந்த விமானம் மூலம் கண்காணிப்பர்.
செரிங்காட், கியாஸ், லசாரஸ், செயிண்ட் ஜான், குரு, தெக்குகோர் ஆகிய தென்தீவுகள் இந்த ஆளில்லாத விமானம் மூலம் கண்காணிக்கப்படும். இந்த ஆளில்லா விமானக் கண்காணிப்பும் சோதனையும் நடைமுறைப்படுத்தப்படுவதால் அந்தத் தீவுகளுக்கு நேரடியாகச் சென்று கண்காணிக்கும் தேவை மூன்று மடங்கு குறைக்கப்படுவதாக ஆணையம் தெரிவித்தது. ஆளில்லா விமானம் மூலம் தென்தீவுகளைக் கண்காணி க்கும் நடைமுறையைச் சாத்தியப் படுத்துவதற்கான சோதனைகள் 2018ஆம் ஆண்டு தொடங்கின.
அந்த ஆளில்லா விமானம் மூலம் அனுப்பப்படும் காணொளிகள், கணினி மூலம் ஆய்வுசெய்யப்படும். அதன் முடிவுகளில் தெரியவரும் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் குப்பைகள் போடப்பட்டிருப்பது, அத்தீவுகளில் உள்ள கட்டடங்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டிருப்பது கண்டறியப்படும் என்று ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஆளில்லா விமானச் சோதனை நடவடிக்கையால், நில ஆணையத்தின் நில மேம்பாட்டு மற்றும் சொத்து நிர்வாகத்துறையில் உள்ள சுமார் 10 அதிகாரிகள், தங்கள் நேரத்தை மற்ற பொறுப்புகளுக்குச் செலவிடுவர் என்று அந்தத் துறைக்குத் தலைமை வகிக்கும் திரு வின்செண்ட் ஆவ் கூறினார்.
இனி அதிகாரிகள் இந்தத் தீவுகளில் வாரம் இருமுறை சென்று சோதனை மேற்கொண்டால் போதும். முன்பு அதிகாரிகள் வாரத்திற்கு நான்கு, ஐந்து முறை சோதனை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
இந்தத் தீவுகளின் மொத்த பரப்பளவையும் கண்காணிக்க மொத்தம் 29 ஆளில்லா விமானங்கள் தேவைப்படுகிறது.
2022 ஏப்ரல் மாதத்திற்குள் மேலும் இரண்டு தீவுப் பகுதிகளைக் கண்காணிக்க இரண்டாவது ஆளில்லா விமானங்களைப் பயன் படுத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஹந்து புசார் மற்றும் ஹந்து கெச்சில் ஆகியவை அந்தத் தீவுகள். இந்தத் தீவுகள் செரிங்காட் தீவில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளன. இந்தத் தீவுகளில் சூரியத் தகடு மின்சக்தியால் இயங்கக்கூடிய ஆளில்லா விமானம் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தும் வழிமுறைகளை ஆணையம் ஆராய்ந்து வருவதாக திரு ஆவ் தெரிவித்தார்.

