செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
2d557c0d-1e1e-4e81-99ca-368054bd0df0
-

ஆடவர்களை மானபங்கம் செய்ததாக போலிஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு

போலிஸ் அதிகாரி ஒருவர், போலிஸ் நிலையத்தில் இரண்டு ஆடவர்களை மானபங்கம் செய்ததாக மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டது.

யிக் வாய் ஹாங், 46 என்ற அந்த போலிஸ் அதிகாரி இரண்டு மானபங்கக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். இந்தக் குற்றங்களை அவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த அதிகாரி, இந்த ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி, பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

யிக் $10,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு மே 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் இரண்டாண்டு சிறைத்தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படித் தண்டனை விதிக்கப்படலாம்.

பணிப்பெண்ணின் கண்களில் குத்தியதாக மாது மீது குற்றச்சாட்டு

தன்னிடம் பணிபுரிந்த பணிப்பெண்ணின் கண்களில் தாக்கி நிரந்தரமான பார்வைக்கோளாறு ஏற்படுத்தியதாக மாது ஒருவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

உம்மி கால்சும் அலி என்ற அந்த மாது, பணிப்பெண்ணின் கையில் பலமுறை சூடான இஸ்திரிப்பெட்டியை வைத்துத் தேய்த்ததாகவும் பணிப்பெண்ணின் கன்னத்திலும் காதுகளிலும் அறைந்ததாகவும் நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே காயப்படுத்தியது; ஆபத்தான முறையில் கடுமையான காயங்களை விளைவித்தது என இரண்டு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.

அவர் மேலும் 10 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். பணிப்பெண் சுகியெம் சமாட் ரடிமாவுக்குச் சம்பளம் கொடுக்கத் தவறிய ஒன்பது குற்றச்சாட்டுகளும் அவற்றில் அடங்கும்.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை பணிப்பெண்ணுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு ஆறு முறை, பணிப்பெண் சுகியெம்முக்கு சிகிச்சை தேவைப்பட்டது. அப்போது சுகியெம்முக்குத் தேவையான மருத்துவக் கவனிப்பு வழங்கப்படாததற்கும் அவர் மீது குற்றம் சாட்டப்படும்.

வீட்டு வாடகை மோசடியில் ஈடுபட்டதாக மாது மீது குற்றச்சாட்டு

வீட்டுக்குச் சொந்தக்காரர் விளம்பரம் கொடுப்பதைப் போல் இணையத்தில் விளம்பரம் கொடுத்து மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் 46 வயது மாது ஒருவரை போலிஸ் நேற்று முன்தினம் கைது செய்தது. அந்த மாதின் நடவடிக்கையால் ஏமாந்தவர்கள் $10,000க்கு மேற்பட்ட பணத்தை இழந்துவிட்டனர்.

இந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதிக்கும் ஏப்ரல் 7ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் வீட்டு வாடகை மோசடி குறித்து ஆறு புகார்கள் வந்ததாக போலிஸ் தெரிவித்தது.

பிடோக் நார்த் பகுதியில் ஒருவர் தனது வீட்டை வாடகைக்கு விடுவதாக இணையத்தில் அந்த மாது ஒரு விளம்பரம் செய்திருந்தார். அந்த விளம்பரத்தைப் பார்த்துத் தொடர்புகொண்டவர்களிடம் முன்பணம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இதுபோன்று அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் அந்த மாதை போலிசார் அடையாளம் கண்டு, கைது செய்தனர். குறைந்தது ஆறு பேரை அந்த மாது ஏமாற்றியுள்ளது தொடக்கவிசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த மாது மீது நேற்று நீதிமன்றத்தில் மோசடிக் குற்றம் சுமத்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த மாதுக்கு பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.