பணிப்பெண் பட்டினிக்கொலை: ஆயுள் தண்டனையை குறைக்க போலிஸ்காரர் மனைவி முயற்சி

பணிப்பெண் பட்டினிக்கொலை: ஆயுள் தண்டனையை குறைக்க போலிஸ்காரர் மனைவி முயற்சி

2 mins read
35608d50-fbcb-4fe2-9723-e0d592497f8f
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தன் மீது சுமத்தப்பட்ட 28 குற்றச்சாட்டுகளையும் போலிஸ்காரரின் மனைவியான 41 வயது காயத்திரி முருகையன் (இடது) ஒப்புக் கொண்டார். 2016 ஜூலை 26ஆம் தேதி கடைசியாக தாக்கப்பட்டபோது 24 வயது பணிப்பெண் பியாங் ஙெ டான் (வலது) உயிரிழந்தார். படங்கள்: ஹெல்பிங் ஹேண்ட்ஸ் ஃபார் மைக்ரண்ட் வொர்க்கர்ஸ், வான்பாவ் -

மியன்மார் பணிப்பெண் பட்டினி போட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் முன்னாள் காவல்துறை அதிகாரியின் மனைவி, ஆயுள் தண்டனையிலிருந்து தப்பிக்க புதிய வழக்கறிஞரை நியமித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தன் மீது சுமத்தப்பட்ட 28 குற்றச்சாட்டுகளையும் போலிஸ்காரரின் மனைவியான 41 வயது காயத்திரி முருகையன் ஒப்புக் கொண்டார். அவற்றில் நோக்கமற்ற மரணம் விளைவித்த குற்றச்சாட்டு மிகவும் கடுமையானது.

அதிகபட்சமாக இதற்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தியிருந்தார்.

மற்றவை பணிப்பெண்ணை காயப்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுகள்.

2016 ஜூலை 26ஆம் தேதி கடைசியாக தாக்கப்பட்டபோது 24 வயது பணிப்பெண் பியாங் ஙெ டான் உயிரிழந்தார்.

அப்போது அவரது உடல் எடை 24 கிலோ மட்டுமே இருந்தது.

உயர்நீதிமன்ற நீதிபதி சீ கீ ஊன் இன்று (ஏப்ரல் 29) காயத்திரிக்கு தண்டனை விதிக்கவிருந்தார். ஆனால் வழக்கு விசாரணையின்போது அவர் வழக்கறிஞரை மாற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டது.

இதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி சீ, காயத்திரி குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட தனது நிலையிலிருந்து மாறியிருப்பதுபோல் தெரிகிறது என்றார்.

அது குறித்து தெளிவுபடுத்தும்படி அவரது புதிய வழக்கறிஞரான சென்னிடம் நீதிபதி கூறினார்.

இதையடுத்து பேசிய திரு சென், நோக்கமற்ற கொலைக் குற்றச்சாட்டை அரசு தரப்பினர் குறைக்கும்படி பரிசீலிக்க தனது கட்சிக்காரர் கருணை மனுவைத் தாக்கல் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார்.

முன்பு வழக்கு விசாரணையின்போது காயத்திரி கர்ப்பிணியாக இருந்ததால் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் அவர் மீதான கொலைக் குற்றச்சாட்டு குறைக்கப்பட்டு நோக்கமற்ற மரணம் விளைவித்த குற்றச்சாட்டாக மாற்றப்பட்டது.

தனது கட்சிக்காரர் முன்பு ஒப்புக் கொண்டதை மீட்டுக்கொள்ள விரும்பவில்லை என்று குறிப்பிட்ட வழக்கறிஞர் சென், தண்டனையைக் குறைக்கும் மனுவை மட்டும் தாக்கல் செய்ய அவகாசம் ேகட்டுள்ளார் என்றார்.

இதையடுத்து வழக்கு மே 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்