அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கடுமையான ரத்தக்கசிவு ஏற்படுவது அரிது. இருப்பினும், உயிருக்கு ஆபத்தான சிக்கலை அது ஏற்படுத்திவிடும். உதவி கோரும் நிலையில் நோயாளிகள் இருக்கமாட்டார்கள். தாதியர் அடிக்கடி வந்து கண்காணித்தாலும், அடுத்த முறை வருவதற்குள் ரத்தக்கசிவு மோசமாகலாம்.
ரத்தக்கசிவு ஏற்படுவதைக் கண்டறியும் வகையில் தொடர்ந்து கண்காணிக்கும் தொழில்நுட்பத் தீர்வு ஒன்று தேவைப்படுவதுடன் தாதியர் தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும் வேண்டும்.
இந்நிலையில் சாங்கி பொது மருத்துவமனை, சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து எச்சரிக்கை உணரி ஒன்றை உருவாக்கியுள்ளன.
நோயாளியின் காயத்திற்குக் கட்டுப் போட்டுள்ள நிலையில், கட்டின் மீது லேசான அந்தக் கருவி வைக்கப்படும்.
உடனே ரத்தக்கசிவைக் கண்டுபிடித்துவிடுவதால் நிலைமை மோசமாவதைத் தடுக்க முடியும்.
அத்துடன் நோயாளியின் பாதுகாப்பிற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தாதியர் அடிக்கடி கண்காணிக்க வேண்டிய தேவையும் இருக்காது. சிங்கப்பூரிலும் அமெரிக்காவிலும் இக்கருவிக்குக் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

