கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக கடந்த ஆண்டு ஊழியர்கள் பலருக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக சிலருக்கு வேலை-வாழ்க்கை சமநிலை பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
வீட்டியிலிருந்து வேலை செய்யும்போது அன்றைய பணிகளை எப்போது முடித்துக்கொள்வது என்று தெரியாமல் ஊழியர்கள் சிலர் தவித்தது தெரியவந்தது.
இது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதித்து மனஉளைச்சலை ஏற்படுத்தியது.
எனவே ஊழியர்களின் மன
வலிமையைப் பலப்படுத்துவது அவசியம் என்பதை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீட்டிலிருந்து வேலை செய்யும் அணுகுமுறை காட்டியிருப்பதாக மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற தேசிய வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார இயக்கத்தின் அறிமுக விழாவில் இதுகுறித்து அவர் பேசினார். ஜூரோங்கில் உள்ள வர்த்தகச் சங்க மையத்தில் நடைபெற்ற அறிமுக விழா இணையத்தில் ஒளிபரப்பப்பட்டது.
"ஊழியர்கள் தங்கள் உடல்
நலத்தை மட்டுமின்றி மனநலத்தையும் பேணிக் காக்க வேண்டும்," என்று திரு ஸாக்கி வலியுறுத்தினார்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த இயக்கத்துக்கு வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் ஏற்பாடு செய்தது. வேலையிடங்களில் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் மேம்படுத்த இயக்கம் இலக்கு கொண்டுள்ளது. ஊழியர்களின் மனவலிமையை அதிகரிக்க வரும் செப்டம்பர் மாதத்தில் புதிய இயக்கம் அறிமுகப்படுத்தப்படும். அதில் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களும் அமைப்புகளும் சிறந்த
அணுகுமுறைகளைப் பகிர்ந்துகொள்ள இருக்கின்றன.
வேலையிடங்களில் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் மேம்படுத்த நிறுவனங்களுக்கு மனிதவள அமைச்சு தொடர்ந்து ஆதரவுக் கரம் நீட்டும் என்றார் திரு ஸாக்கி.
மனநலம் தொடர்பான பயிலரங்குகள், இணையப்பக்கங்கள் ஆகியவற்றை வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் அறிமுகப்படுத்தும்.
மனநலம் தொடர்பான முத்தரப்பு விருது அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும். சிறந்த அணுகு முறைகளை நடைமுறைப்படுத்தும் தனிநபர்களையும் நிறுவனங்களையும் அடையாளம் காட்ட இந்த விருது வழங்கப்படும்.
வேலையிடங்களில் பாதுகாப்புக்கும் சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இடைவேளை எடுத்துக்கொள்ளும்படி முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அது அரை மணி நேரம் அல்லது அதற்கு மேல் இருக்கலாம்.
அந்த நேரத்தில் முதலாளிகளும் ஊழியர்களும் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் அல்லது பாதுகாப்புச் சோதனைகளை நடத்திக்கொள்ளலாம்.
"புதிய அணுகுமுறைகளை அடிக்கடி கடைப்பிடித்தால் அது பழக்கமாகிவிடும். அதன்மூலம் ஊழியர்களின் ஆரோக்கிய
நிலையை மேம்படுத்தலாம்.
"வேலையிடத்தில் இருக்கும் பாதுகாப்பற்ற அம்சங்கள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கும்," என்று வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றத்தின் தலைவர் ஜான் இங் தெரிவித்தார்.
வேலையிடப் பாதுகாப்பு தொடர்பாக இவ்வாண்டில் மேலும் இரண்டு இயக்கங்கள் நடத்தப்படும். அண்மைய ஆண்டுகளாக வேலையிடங்களில் மரணங்களை விளைவிக்காத காயங்கள் ஏற்படுவதற்கான இரண்டு முக்கிய காரணங்களை அவை எதிர்கொள்ளும்.
அதிக ஆபத்து உள்ள துறைகளுக்காக இயக்கம் ஒன்று நடத்தப்படும். உயரமான இடங்களிலிருந்து விழுவது, தடுக்கி விழுவது, வழுக்கி விழுவது போன்றவற்றைத் தடுக்க வரும் ஜூன் மாதத்தில் அந்த இயக்கம் அறிமுகப்படுத்தப்படும்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பாதுகாப்பான கைகள் இயக்கத்தை அறிமுகப்படுத்த திட்ட
மிடப்பட்டுள்ளது. இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது விபத்துகள் நிகழாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.
ஊழியர்களைப் பயிற்சிகளுக்கு அனுப்பவும் வேலையிடச் செயல்முறைகள், அவ்வப்போது மறுஆய்வு செய்யவும் இயந்திரங்களையும் சாதனங்களையும் அடிக்கடி சோதித்துப் பார்க்கலும் முதலாளிகளுக்கு திரு ஸாக்கி அழைப்பு விடுத்துள்ளார்.

