20,000 பேரின் தகவல்கள்
கசிவு; $29,000 அபராதம்
இருதாயிரம் பேரின் தகவல்கள் ஊடுருவப்பட்டதால் நியாயமான வேலை நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணியை(Tafeb) மேற்பார்வையிடும் 'தால்' (Tal) எனும் முத்தரப்புக் கூட்டணி நிறுவனத்துக்கு 29,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
தனது வாடிக்கையாளர்களின் தகவல்களை ஊடுருவல்காரர்கள் அத்துமீறி பெற்றதை 'தால்' தடுக்க தவறிவிட்டதாக தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது.
ஊடுருவல்காரர்கள் ஊடுருவிய தரவுகளில் பெயர், அடையாள எண், தொடர்பு எண், மின் அஞ்சல், முகவரி, வயது, இனம், திருமண விவரம், சம்பளம், இழப்பீட்டுத் தொகை உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருந்தன.
வர்த்தக ரீதியிலான தொடர்பு விவரங்களும் இந்த ஊடுருவலில் கசிந்துவிட்டன. கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றது.
நீதிமன்றத்துக்கு 3வது முறையாக
வராத ஓ.கே. லிம்
மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் ஹின் லியோங் டிரேடிங் நிறுவனர் லிம் ஊன் குயின் மூன்றாவது முறையாக நேற்று நீதிமன்றத்துக்கு வரவில்லை. அவர் மருத்துவ விடுப்பு பெற்றுள்ளதால் வழக்கு விசாரணையில் பங்கேற்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஓ.கே. லிம் என்று பிரபலமாக அழைக்கப்படும் 79 வயது முன்னாள் எண்ெணய் நிறுவன தொழிலதிபர் நாட்பட்ட 'சைனசைடிஸ்ட்டிஸ்' பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணையை எதிர்நோக்கும் உடல் நிலையில் அவர் இல்லை என்று அவரது மருத்துவர்கள் கூறியிருந்தனர். இதற்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும். ஆனால் ரத்த அடர்த்தியைக் குறைக்கும் மருந்தை எடுத்துவருவதால் அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் அவர் இருப்பதாக அவரது வழக்கறிஞர் தவிந்தர் சிங் சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர் நவின் தேவர் கூறினார்.
மானபங்கம் செய்த ஓட்டுநர்
பெண் பயணியை மானபங்கம் செய்த வழக்கில் டாக்சி ஓட்டுநர் குற்றவாளி என்று விசாரணைக்குப் பின்னர் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஹாஜி முகமது யூசூஃப், 56, பெண்ணை மானபங்கம் செய்த குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக்குக் கோரியிருந்தார்.
அப்பர் பாய லேபார் சாலை அருகேயுள்ள லோரோங் ஆ சூவில் 2019 ஜனவரி 5ஆம் தேதி சம்பவம் நடந்தது. பாதிக்கப்பட்ட 30 வயது பெண்ணின் பெயரை நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளியிட முடியாது.
டாக்சியில் ஏறிப பின்னர் தூங்கிவிட்டதாகவும் எழுந்தபோது யூசூஃப் தம்மை மானபங்கம் செய்துகொண்டிருந்ததாகவும் அப்பெண் கூறியிருந்தார். கூச்சலிட்ட தம்மை யூசூஃப் சற்று நேரத்தில் இறக்கிவிட்டதாகவும் அவர் சொன்னார்.
ஆனால் யூசூஃப் அப்பெண்ணைத் தொடவில்லை என்றும் இடம் வந்ததும் அவரைக் கூப்பிட்டு எழுப்ப முயன்றதாகவும் தமது வாதத்தில் கூறினார்.
இரு வாதங்களையும் கேட்ட மாவட்ட நீதிபதி ஜான் இங், பாதிக்கப்பட்ட பெண் உண்மையான, தெளிவான சாட்சியத்தை அளித்ததாக நேற்றைய தீர்ப்பில் கூறினார். ஆனால் யூசூஃப் மழுப்பியதாக தமக்கு தோன்றியது என்றார் நீதிபதி.
யூசூஃப்புக்கு மே 17ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும். மானபங்கக் குற்றவாளிகளுக்கு இரண்டாண்டுகள் வரையிலான சிறை, அபராதம், பிரம்படி அல்லது அனைத்தும் விதிக்கப்படலாம். ஆனால் யூசூஃப் 50 வயதைத் தாண்டியவர் என்பதால் அவருக்கு பிரம்படி விதிக்க முடியாது.

