தமது கணவருடன் சேர்ந்து, 10,800 வெள்ளி மதிப்புள்ள 2020 வரவு செலவுத் திட்ட மளிகைப் பொருள் பற்றுச்சீட்டுகளைத் திருடிய மாதுக்கு நேற்று 48 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
டாண்டி யொஹய்டா சமாட், $2250 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளைத் திருடியதாக ஏற்கனவே 15 குற்றச்சாட்டுகள் போடப்பட்டன. மேலும் 57 குற்றச்சாட்டுகள் நேற்று கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
ஏற்கனவே வேறொரு குற்றத்துக்காக தண்டனை குறைப்பு மனுவில் 2019இல் விடுவிக்கப்பட்ட டாண்டி, நன்னடத்தை கண்காணிப்பைத் தவறியதால் அவர் கூடுதலாக 121 நாட்களுக்கு சிறையில் இருக்க வேண்டும்.
பற்றுச்சீட்டுகளைத் திருட டாண்டி, 45, திட்டம் தீட்டினார். விடுவிக்கப்பட்டிருந்த காலத்தில் அவர் தமது கணவர் ஸுல்கிஃப்லி முகமது யாத்திம்முடன் கூட்டுசேர்ந்து அண்டைவீட்டுக்காரர்களிடமிருந்து பற்றுச்சீட்டுகளைத் திருடினார். அதனால் மூத்த குடிமக்கள் உட்பட, 72 பேர் பற்றுச்சீட்டுகளை இழந்தனர்.
மார்சிலிங்கில் வசித்த அத்தம்பதியினர், பின்னிரவு நேரங்களில் மற்ற குடியிருப்பாளர்களின் அஞ்சல்பெட்டிகளைத் தேடினர்.
மேல் மூடியை எளிதாகத் தூக்க முடிந்த அஞ்சல் பெட்டிகளுக்குள், துணிகளைத் தொங்க வைக்கும் கம்பிகளை விட்டு பற்றுச்சீட்டுகளைக் கொண்ட கடித உறைகளை எடுத்தனர். சில முறை, ஸுல்கிஃப்லி குறடுகளால் அஞ்சல்பெட்டிகளை உடைத்துப் பற்றுச்சீட்டுகளைத் திருடினார்.
ஒவ்வோர் உறையிலும் $10 மதிப்புள்ள 15 பற்றுச்சீட்டுகள் இருந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. பற்றுச்சீட்டுகளைக் காணவில்லை என்று குறைந்தது 19 பேர் போலிஸில் புகார் அளித்ததால் குற்றங்கள் பற்றி தெரிய வந்தது.
ஸுல்கிஃப்லிக்கு எதிரான வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை.

