2026க்குள் மூன்றாண்டு பயணமாகும் உயர் நைடெக் கல்விப்பாதை

2026க்குள் மூன்றாண்டு பயணமாகும் உயர் நைடெக் கல்விப்பாதை

1 mins read
8b12b5e6-ff76-403f-b03c-259bdbf323a4
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தொழில்நுட்பக் கல்விக் கழக (ஐடிஇ) மாணவர்கள், தங்களின் மேல்நிலைச் சான்றிதழை நான்கு ஆண்டுகளுக்குப் பதிலாக மூன்றே ஆண்டுகளில் பெறலாம்.

இது 2026ஆம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மாணவர்கள் உயர் நைடெக் பாடங்களை முடித்து மூன்று ஆண்டுகளில் தங்களின் சான்றிதழ்களைப் பெறும் வகையில் அடுத்த ஆண்டு முதல், 16 ஐடிஇ பாடங்களுக்கான பாடத்திட்ட அமைப்புமுறை மாற்றம் காணவுள்ளது.

இந்த 16 பாடங்களிலும் 2022ல் கிட்டத்தட்ட 2,000 மாணவர்கள் பதிவுசெய்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடிஇ கல்லூரி (கிழக்கு) வளாகத்தில் புதிய பயிற்சி நிலையம் ஒன்றை நேற்று திறந்து வைத்தபோது, கல்வி இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் இதனை அறிவித்தார்.

தற்போதைய பாடத்திட்ட அமைப்புமுறைப்படி, நைடெக் நிலையில் ஈராண்டு, உயர் நைடெக் நிலையில் ஈராண்டு என்று உள்ளது.

இதற்குப் பதிலாக புதிய அமைப்புமுறை அமல்படுத்தப்படவுள்ளது.

2026க்குள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் புதிய முறையின் முதற்கட்ட அமலாக்கம் இந்த 16 பாடங்கள் என்று கூறப்பட்டது.

நைடெக் பாடங்கள் 8, உயர் நைடெக் பாடங்கள் 8 ஆகியவை அக்குறிப்பிட்ட 16 பாடங்களில் இடம்பெறவுள்ளன.

பல்வேறு வகையான மாணவர்களுக்கு ஏற்ப, பாடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு பேச்சாளர் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்குள் புதிய மூன்றாண்டு திட்டமாக 80% ஐடிஇ பாடங்கள் மாறிவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.