'தொழிற்துறையை பலப்படுத்த வேண்டும்'

'தொழிற்துறையை பலப்படுத்த வேண்டும்'

2 mins read
17f1def5-532e-4c04-b906-78d244120593
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 பிந்திய காலத்தில் புதிய வாய்ப்புகளைக் கைப்பற்ற வேண்டுமெனில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிங்கப்பூரின் 23 தொழில்துறை உருமாற்றத் திட்டத்தை புதுப்பித்து பலப்படுத்த வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் வலியுறுத்தியுள்ளார்.

'ஐடிஎம் 2021' எனும் அந்த திட்டத்தை மூன்று வழிகளில் பலப்படுத்தலாம் என்றார் அவர்.

வலுவான பணிக்குழுவின் பரிந்துரைகளை புகுத்துதல், ஆய்வு மற்றும் புத்தாக்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுதல், வேலைமற்றும் திறன்களில் கூடுதல் அக்கறை செலுத்துதல் என்று அமைச்சர் ஹெங் குறிப்பிட்டார்.

"ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொழில்துறை உருமாற்றுத் திட்டத்தைத் தொடங்கியதைப் போல அதனை வலுப்படுத்த வேண்டும். எதிர்காலத்திற்கு ஊழியர்களையும் வர்த்தகங்களையும் தயார்ப்படுத்தும் முயற்சிகளை நாம் இரட்டிப்பாக்க வேண்டும்," என்று துணைப் பிரதமரும் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச் சருமான ஹெங் தெரிவித்தார்.

இன்றைய எதிர்கால பொருளியல் மன்றத்தின் முதல் மெய்நிகர் கூட்டத்தில் அவர் பேசினார்.

அந்தக் குழுதான் தொழில்துறை உருமாற்றுத் திட்டத்துக்கு தலைமை வகித்து மேற்பார்வையிடுகிறது.

"பெரும்பாலான நிறுவனங்கள் நெருக்கடியை சமாளிக்கவும் ஆற்றலைக் கட்டிக் காக்கவும் திறமையான ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்ளவும் திறம்பட செயல்பட்டுள்ளன. நமது வலுவான முத்தரப்பு அடித்தளத்துடன் வலுவான நிலையிலிருந்து எதிர்காலத்தை அமைத்து வருகிறோம்," என்று அவர் தெரிவித்தார்.

எதிர்கால பொருளியல் மன்றத்தின் கீழ் 2016ல் தொழில்துறை உருமாற்றுத் திட்டம் தொடங்கப்பட்டது.

உற்பத்தித் துறையில் உள்ள 23 தொழில்துறைகளுக்குத் தேவையான தகுந்த சுற்றுச்சூழல், வர்த்தகம், தொடர்புகள், அத்தியாவசிய உள்நாட்டு சேவைகள், நவீன சேவைகள், பாணிகள் போன்றவை மூலம் வடிவமைக்கப்படுகின்றன.

இந்தப் பொருளியல் உருமாற்றுத் திட்டத்தின் முயற்சிகள் தேசிய ஆய்வு, புத்தாக்கம் மற்றும் நிறுவன திட்டத்துடன் (ஆர்ஐஇ 2025) ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று திரு ஹெங் மேலும் கூறினார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆய்வு, புத்தாக்கத்திற்கு 25 பில்லியன் வெள்ளியை சிங்கப்பூர் முதலீடு செய்யவுள்ளதே அதற்கு காரணம்.