வளர்ச்சி தொடர்பான தேவைகளுடைய பாலர் பள்ளி மாணவர்களுக்கு வரும் ஆண்டுகளில் மேலும் அதிகமான நிபுணத்துவ ஆதரவு வழங்கப்படும். இதற்காக சிங்கப்பூரின் 1,900க்கும் மேற்பட்ட பாலர் பள்ளிகளில் ஒருங்கிணைப்பாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவர். அத்துடன் அனைவரையும் உள்ளடக்கிய கல்வி தொடர்பில் கூடுதல் பயிற்சி வாய்ப்புகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது நடைமுறையில் உள்ள ஆதரவுத் திட்டங்கள், மேலும் பல பாலர் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
அனைத்து பாலர் பள்ளி மாணவர்களையும் உள்ளடக்குவது தொடர்பிலான பணிக்குழு ஏழு பரிந்துரைகளை முன்வைத்ததை அடுத்து அவை தொடர்பில் பாலர் பருவ மேம்பாட்டு வாரியம் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
ஆரம்பகாலக் குறுக்கீட்டு ஆதரவை நல்கும் நான்கு அடுக்கு கட்டமைப்பு ஒன்றும் நேற்று அறிவிக்கப்பட்டது.
இக்கட்டமைப்பின்படி வளர்ச்சித் தேவைகளுடைய சிறார்களுக்கு மேம்பட்ட ஆதரவு வழங்கப்படுவதுடன் அனைத்து பாலர் பள்ளிகளுக்கும் இதில் ஒரு பங்குண்டு என்ற அறிகுறியாகவும் அமைந்திடும். கல்வி மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சரான சுன் சூலிங், பணிக்குழுவின் தலைவர்களுள் ஒருவராவார்.
அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கிய முன்னோடி ஆதரவுத் திட்டம், பெற்றோர்களுக்கும் நடுத்தர ஆதரவுத் தேவைகளுடைய பாலர் பள்ளி மாணவர்களுக்கும் மேலும் வசதியாக அமைந்ததென திருவாட்டி சுன் நேற்று கூறினார்.
இதுபோன்று ஏழு முன்னோடித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் 2022ஆம் ஆண்டு முற்பாதிக்குள் இறுதி முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படுவதைத் தாம் காண விரும்புவதாகவும் அவர் கூறினார்.
ஆரம்பகாலக் குறுக்கீட்டு ஆதரவு அதிகம் தேவைப்படும் பிள்ளைகளை ஒருங்கிணைக்கும் வாய்ப்புகளை மேம்படுத்துவது, வளர்ச்சித் தேவைகளை விரைவில், முறையாக அடையாளம் காண்பது, பெற்றோர் கல்வி மூலம் அவர்களின் ஆதரவை வலுப்படுத்துவது போன்ற மேலும் பல பரிந்துரைகளைப் பணிக்குழு முன்வைத்தது.